தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை சற்றுமுன்னர் (05) அறிவித்துள்ளது. இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தின் தலைவராக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு அறிமுக வீரர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய…
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும், 13ம் திகதி ஆரம்பமாகிறது. இந்தப் போட்டித் தொடருக்கான இலங்கை குழாத்தில் முக்கியமான பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறுதியாக நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் இலங்கை அணி சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்த தவறியிருந்தது.
இதன் காரணமாக தென்னாபிரிக்க தொடருக்கான அணியில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதென நாம் நேற்றைய தினம் செய்தியொன்றினை வெளியிட்டிருந்தோம். இதன்படி, சற்று முன்னர் அறிவிக்கப்பட்ட குழாத்திலிருந்து, இலங்கை அணியின் டெஸ்ட் தலைவரான தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வரும் திமுத் கருணாரத்ன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், உப தலைவராக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய தொடர்களில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறியதன் காரணமாக, தினேஷ் சந்திமாலுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது துடுப்பாட்டத்தை வலுப்படுத்திக் கொள்ளவுள்ளார் எனவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தினேஷ் சந்திமாலுடன், வேகப்பந்து வீச்சு ஆடுகளங்களில் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு பிரகாசிக்கத் தவறி வரும் ரொஷேன் சில்வா, துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக செயற்பட்டு வரும் டில்ருவான் பெரேராவும் நீக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் ஆஸி. தொடரின் போது உபாதைக்குள்ளான துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப் மற்றும் லஹிரு குமார ஆகியோரும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும், பிரதான வீரர்களின் இழப்பை பூர்த்தி செய்யும் நோக்கில் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வரும் நான்கு அறிமுக வீரர்களை கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் முதற்தர கழகங்களுக்கு இடையிலான நான்கு நாள் போட்டித் தொடரில் 1000 ஓட்டங்களை கடந்துள்ள ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ பெரேரா ஆகிய துடுப்பாட்ட வீரர்களும், சுழற்பந்து வீச்சாளரான லசித் அம்புல்தெனிய மற்றும் வேகப்பந்து வீச்சை பலப்படுத்தும் நோக்கில் மொஹமட் சிராஸ் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அறிமுக வீரர்களில் ஒருவராக இணைக்கப்பட்டுள்ள ஓசத பெர்னாண்டோ உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ப்ரீமியர் லீக் தொடரில் சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக விளையாடி 16 இன்னிங்ஸ்களில் 1181 ஓட்டங்களை (6 சதங்கள், 4 அரைச்சதங்கள்) குவித்துள்ளார். இவருடன் அஞ்செலோ பெரேரா 882 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், இதில் ஒரே போட்டியில் இரண்டு இரட்டைச் சதங்களை விளாசி சாதனையும் படைத்துள்ளார்.
மாலிங்க – திசர – மெதிவ்ஸை ஒரே மேசையில் சந்திக்கவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்
இலங்கை கிரிக்கெட் அணிக்குள் சிரேஷ்ட…
பந்து வீச்சை பொருத்தவரை இடது கை சுழற்பந்து வீச்சாளரான லசித் அம்புல்தெனிய 7 இன்னிங்ஸ்களில் 22 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஸ் 11 இன்னிங்ஸ்களில் 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இதேவேளை, இலங்கை அணிக்கு டெஸ்ட் போட்டிகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி வந்த கௌஷால் சில்வா மற்றும் சகலதுறை வீரர் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பியுள்ளனர். கௌஷால் சில்வா கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியதுடன், மிலிந்த சிறிவர்தன 2016ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றிருந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார். இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்தும் பிரகாசித்து வருவதன் காரணமாக மீண்டும் தேசிய அணியுடன் இணைந்துள்ளனர்.
தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம்
திமுத் கருணாரத்ன (தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல (உப தலைவர்), லஹிரு திரிமான்னே, கௌஷால் சில்வா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, மிலிந்த சிறிவர்தன, தனன்ஜய டி சில்வா, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ பெரேரா, சுரங்க லக்மால், கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, சாமிக கருணாரத்ன, மொஹமட் சிராஸ், லக்ஷான் சந்தகன், லசித் அம்புல்தெனிய
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<