இலங்கை மகளிர் குழாத்தில் வடக்கு, மலையக வீராங்கனைகள் இணைவு

SAFF Women's Championship 2022

301

நேபாளத்தில் செப்டம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கை மகளிர் குழாம் ஞாயிற்றுக்கிழமை (4) வெளியிடப்பட்டுள்ளது.

SAFF மகளிர் சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 6ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் உள்ள டஷ்ரத் அரங்கில் இடம்பெறவுள்ளது.

இதில் குழு Aயில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளும், குழு Bயில் போட்டிகளை நடாத்தும் நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் போட்டியிடவுள்ளன.

தொடரின் முதல் சுற்றான லீக் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இடம்பெறும். அதன் பின்னர் இரு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகும். அரையிறுதிப் போட்டிகள் செப்டம்பர் 16ஆம் திகதியும், பின்னர் தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் 19ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இலங்கை அணி தமது முதல் போட்டியில் செப்டம்பர் 9ஆம் திகதி பூட்டான் அணியையும், அடுத்த போட்டியில் நேபாளம் அணியை செப்டம்பர் 12ஆம் திகதியும் எதிர்கொள்ளவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை மகளிர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரர் டிட்லி ஸ்டேன்வோல் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் பல கட்டங்களாக இடம்பெற்ற இந்த தொடருக்கான வீராங்கனைகள் தெரிவின் பின்னர், ஆரம்ப கட்ட குழாம் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்த இந்த வீராங்கனைகளில் இருந்து தொடருக்கான இலங்கை மகளிர் இறுதிக் குழாம் தற்போது இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஏற்கனவே இலங்கை அணியில் இடம்பெற்ற அனுபவ மற்றும் சிரேஷ்ட வீராங்கனைகளுடன் இளம் மற்றும் புதிய வீராங்கனைகளும் SAFF மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஏற்கனவே தேசிய அணியின் இடம்பெற்ற அயோமி ஷானிகா, யொஹானி வீரசிங்க மற்றும் சகுரா செவ்வந்தி ஆகியோர் இந்த தொடருக்கான இலங்கை அணியின் கோல் காப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, மலையக வீராங்கனையான யுவராணி செல்வராஜ், மன்னார் வீராங்கனையான திலுக்ஷனா தேவஷாஸாயம் மற்றும் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் வீராங்கனைகளான தர்மிகா சிவனேஸ்வரன், ஷானு பாஸ்கரன் ஆகியோரும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அணியின் தலைவியான 25 வயதுடைய பூர்ணிமா சந்தமாலி செயற்படவுள்ளதுடன், துணைத் தலைவியாக 23 வயதுடைய மதுபாஷினி நவஞ்சனா பெயரிடப்பட்டுள்ளார். மேலும், இலங்கை அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக அதுகொரல அவர்களும், அணி முகாமையாளராக கருணாதிலகவும் செயற்படுகின்றனர்.

SAFF மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணி தற்போது நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், போட்டிக்கு முன்னர் அங்கு பயிற்சிகளில் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மகளிர் குழாம்

பூர்ணிமா சந்தமாலி (அணித் தலைவி), மதுபாஷினி நவஞ்சனா (துணைத் தலைவி), ஜனிதா லக்மினி, யுவராணி செல்வராஜ், தர்மிகா சிவனேஸ்வரன், சலனி ஏகநாயக்கே, சலோமி சமந்த, யொஹானி வீரசிங்க, காயத்ரி மந்தஹாசி, பிரவீனா பெரேரா, செவ்வந்தி நிசன்சலா, அயோமி ஷானிகா, உத்பலா காவிந்தி, காஞ்சனா விரங்கா, எரந்தி லியனகே, பாரமி அஹின்சா, சகுரா செவ்வந்தி, திலுக்ஷனா தேவஷாஸாயம், துஷானி மதுஷிகா, இமாஷா ஸ்டெப்னி டயஸ், ஷானு பாஸ்கரன், ஓஷதி ஸ்ரீ ஜெயம்பதி, நிரஞ்சலா இளங்ககோன்

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<