இலங்கையில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) 17 வயதின் கீழ் வீரர்களுக்கான சம்பயின்ஷிப் தொடருக்கான இலங்கை குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
SAFF 17 வயதின் கீழ் சம்பயின்ஷிப் தொடர் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இடம்பெறவுள்ளது. இம்முறை தொடரில் வரவேற்பு நாடான இலங்கையுடன் இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்கவுள்ளன.
இதில் குழு Aயில் இலங்கை அணியுடன் பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் அணிகளும், குழு Bயில் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தியா கால்பந்து சம்மேளன உரிமத்தை ரத்து செய்த பிபா
இந்நிலையில், தொடரின் முதல் போட்டியில் 5ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு பூட்டான் மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளதுடன், அன்றைய தினம் இரவு 8 மணிக்கு இடம்பெறும் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் 9ஆம் திகதி இரவு 8 மணிக்கு மாலைதீவுகளை எதிர்கொள்ளவுள்ளது.
முதல் சுற்று நிறைலில் இரண்டு குழுக்களிலும் தலா முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு தெரிவாகும். அரையிறுதி போட்டிகள் செப்டம்பர் 12ஆம் திகதி இடம்பெறும். அதனைத் தொடர்ந்து கிண்ணத்தை வெல்லும் அணியைத் தீமானிக்கும் தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி இரவு 7 மணிக்கு இடம்பெறும்.
இந்நிலையில், தொடர்ச்சியாக முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்த இலங்கை 17 வயதின்கீழ் அணியின் இறுதிக் குழாம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் சனிக்கிழமை (3) உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை தொடரில் இலங்கை அணியின் தலைவராக கண்டி ஸ்ரீ சுமங்கல கல்லூரி மாணவனும் முன்கள வீரருமான தமோத்ய சரத்குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 23 வீரர்களைக் கொண்ட இந்த குழாத்தில் மூன்று கோல் காப்பாளர்களும், எட்டு பின்கள வீரர்களும், ஆறு மத்தியகள வீரர்களும், ஆறு முன்கள வீரர்களும் உள்ளனர்.
இதில், கிண்ணியா அல் அமீன் வித்தியாலயத்தின் மொஹமட் ரிஹாஸ், கண்டி புனித சில்வஸ்டர் கல்லூரியின் மாதவன் பிரவீன் மற்றும் யடியன்தொட்டை NM பெரேரா மஹா வித்தியாலயத்தின் மலிந்து பண்டார ஆகியோர் கோல் காப்பாளர்களாக உள்ளனர்.
அதேபோன்று, யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரியின் 14 வயது வீரரான ரோய்சன் பிரைட் இலங்கை குழாத்தில் உள்ள மிகவும் இளமையான வீரராக இடம்பிடித்திருக்கின்றார்.
அதேபோன்று, இலங்கை 17 வயதின்கீழ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அருன சம்பத்தும், உதவிப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் தேசிய அணி வீரர் கசுன் ஜயசூரியவும், கோல் காப்பு பயிற்றுவிப்பாளராக அன்சார் அஸ்வர் அவர்களும் கடமையாற்றுகின்றனர்.
இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில், தமது பயிற்சிகளையும் இங்கு மேற்கொண்டு வருகன்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
தாமோத்ய சரத்குமார (அணித் தலைவர்), முஹமட் ஷுஹைப், குணநேசன் விதுர்சிகன், ஆதிப் அஹமட், ரோய்சன் பிரைட், சச்சின் திருவேந்திரா, ரிஸ்னி முஹமட், கிருபானந்தன் ஆகாஷ், மொஹமட் ரிஹாஸ், ரமிக மெத்மின், மொஹமட் முபாஸ், ஜெயந்த அனெக்சன், சதேவ் தத்சர, மாதவன் பிரவீன், மொஹமட் பாதிஹ், மொஹமட் அப்துல்லா, மொஹமட் யாசர், நஸ்மி அஹமட், ஃபரீக் அஹமட், மொஹமட் சதீர், கலீல் ஹிஃப்னி, மலிந்து பண்டார, சவிந்து பியுமகார
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<