நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்

3347

நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடருக்கான 17  வீரர்கள் அடங்கிய குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (30) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 15ம் திகதி  வெலிங்டனில் உள்ள பெசின் ரிசேர்வ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை உத்தேச அணி

இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் …

இன்று அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட குழாத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்களை விடுத்து சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் லஹிரு குமார மற்றும் இளம் வீரர் சதீர சமரவிக்ரம மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கையின் அனுபவம் மிக்க இடதுகை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னே, பிரகாசிக்கத் தவறிய காரணத்தால் தேசிய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். எனினும் பங்களாதேஷ் A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வருவதன் காரணமாக அவர் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

அதேநேரம், உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டி வரும், இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம மீண்டும் டெஸ்ட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இவர், அரைச்சதம் உட்பட 90 ஓட்டங்களை பெற்றிருந்தார். சதீர சமரவிக்ரம மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோர் இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தனர்.

இவர்களுடன், தொடர் உபாதைகள் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளரான நுவான் பிரதீப் மற்றும் கிரிக்கெட் சபையின் ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றச்சாட்டப்பட்டிருந்த லஹிரு குமார ஆகியோர் புதிய தேர்வுக்குழுவின் மூலமாக நியூசிலாந்து தொடருக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியிலிருந்து விலக்கப்பட்ட லஹிரு குமார

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் …

நுவான் பிரதீப் கடந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியதுடன், லஹிரு குமார இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்ட போதும், ஒழுக்க விதியினை மீறிய குற்றச்சாட்டுக்காக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, முறையற்ற வகையில் பந்துவீசுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள அகில தனன்ஜய டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் பெயரிடப்படவில்லை. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இவருக்கான பந்துவீச்சு பரிசோதனைகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதன் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்பதால் டெஸ்ட் தொடரில் அகிலவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவருடன் ரங்கன ஹேரத்துக்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் விளையாடிய மலிந்த புஷ்பகுமார மற்றும் கௌஷால் சில்வா ஆகியோரும் நீயூசிலாந்து தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது உபாதைக்குள்ளாகிய தினேஷ் சந்திமால் மீண்டும் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளார் என்பதுடன், உபத் தலைவராக செயற்பட்டு வந்த சுராங்க லக்மாலுக்கு பதிலாக திமுத் கருணாரத்ன பெயரிடப்பட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட சில முக்கியமான மாற்றங்களுடன், வழமையான டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டுவரும் வீரர்கள் நியூசிலாந்து தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), திமுத் கருணாரத்ன (உப தலைவர்), குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, லஹிரு திரிமான்னே, சதீர சமரவிக்ரம, டில்ருவான் பெரேரா, லக்ஷான் சந்தகன், சுராங்க லக்மால், நுவான் பிரதீப், கசுன் ராஜித, லிஹிரு குமார, துஷ்மந்த சமீர