ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான குழாத்தை அறிவிப்பதற்கான காலவரையறை இன்றுடன் நிறைவுபெறுகின்ற நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை குழாத்தை அறிவித்துள்ளது.
>> ICC T20 உலகக்கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு
அணியின் தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக தனன்ஜய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் முதன்மை விக்கெட் காப்பாளராக குசல் பெரேரா பெயரிடப்பட்டுள்ளதுடன், தினேஷ் சந்திமால் இரண்டாவது விக்கெட் காப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதில், கடந்த சில போட்டிகளாக திறமையை வெளிப்படுத்த தவறிவந்த மினோத் பானுக, இறுதிநேரத்தில் குழாத்தில் இடம்பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இவருடன், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோரும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களாக குசல் பெரேரா, தினேஷ் சந்திமாலுடன், பானுக ராஜபக்ஷ, சரித் அசலங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளனர்.
சகலதுறை வீரர்களாக, அணித்தலைவர் தசுன் ஷானக, உப தலைவர் தனன்ஜய டி சில்வா, இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன மற்றும் அண்மையில் நிறைவுற்ற SLC அழைப்பு T20 தொடரில் சிறப்பாக செயற்பட்ட லஹிரு மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேநேரம், சுழல் பந்துவீச்சை பொருத்தவரை, தென்னாபிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக பிரகாசித்திருந்த அறிமுக வீரர் மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, சரித் அசலங்க மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரும் சுழல் பந்துவீச்சை பலப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை, கடந்த காலங்களில் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக உள்ள துஷ்மந்த சமீர இணைக்கப்பட்டுள்ளதுடன், நுவன் பிரதீப்பும் குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளார். எனவே, குறித்த இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன், தசுன் ஷானக, சாமிக்க கருணாரத்ன மற்றும் அண்மையில் லஹிரு மதுஷங்கவும் வேகப் பந்துவீச்சுக்கு வலுவளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாத்துடன், மேலதிக வீரர்களாக, இங்கிலாந்து தொடருடன் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த வேகப் பந்துவீச்சாளர்களான பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், சுல்பந்து வீரர்களான அகில தனன்ஜய மற்றும் புலின தரங்க ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணி விளையாடவுள்ளதுடன், இதில் நபீபியா, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடர் அடுத்த மாதம் 17ம் திகதி முதல் நவம்பர் 14ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பிரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, லஹிரு மதுஷங்க, நுவான் பிரதீப்
மேலதிக வீரர்கள் – லஹிரு குமார, அகில தனன்ஜய, பினுர பெர்னாண்டோ, புலின தரங்க
இலங்கை அணியின் முதல் சுற்றுக்கான போட்டிகள்
- எதிர் நபீபியா – 18 ஒக்டோபர்– அபு தாபி
- எதிர் அயர்லாந்து – 20 ஒக்டோபர்- அபு தாபி
- எதிர் நெதர்லாந்து – 22 ஒக்டோபர் – ஷார்ஜா
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<