இலங்கை அணிக்கு புதிய தலைவர்; புதிய வீரர்களும் அணியில்

FIFA World Cup 2026 Qualifiers

4121

பிஃபா கால்பந்து உலகக் கிண்ணம் 2026 மற்றும் AFC ஆசிய கிண்ணம் 2027 ஆகிய தொடர்களுக்கான பூர்வாங்க தகுதிச் சுற்றில் யேமன் அணிக்கு எதிரான முதல் கட்ட (1st Leg) போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

யேமன் அணிக்கு எதிரான முதல் கட்டப் போட்டி (1st Leg) இம்மாதம் 12ஆம் திகதி சவூதி அரேபியாவிலும், இரண்டாம் கட்டப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கையிலும் (கொழும்பு) இடம்பெறவுள்ளது. இந்நிலையிலே முதல் கட்டப் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது 

இலங்கை அணியை தயார்படுத்தும் நோக்கில் 33 வீரர்கள் உள்ளடங்கிய ஆரம்ப கட்ட குழாம் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் கடந்த சில வாரங்களாக கொழும்பில் தொடர்ந்து பயிற்சிகளைப் பெற்று வந்தனர். இந்நிலையில், குறித்த வீரர்களின் இருந்து தெரிவு செய்யப்பட்ட இறுதிக் குழாம் திங்கட்கிழமை (09) சவூதி ஆரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் 

மேலும், முதல் போட்டிக்கான இலங்கை அணிக்கு பின்கள வீரர் ஷரித்த ரத்னாயக்க தலைவராகவும், ஷமோத் டில்ஷான் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பின்னர், யேமன் அணிக்கு எதிரான இரண்டாம் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக ஹர்ஷ பெர்னாண்டோ செயற்படுவார் என்று இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது 

இந்த தலைமைப் பதவிகளானது தற்காலிகமானதாக இருக்கும் என்றும் எதிர்காலத்தில் நிரந்தர தலைவர் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் இலங்கை கால்பந்து சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது 

குறித்த குழாத்தில் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட வீரருமான சுஜான் பெரேராவுடன் பிரபாத் றுவன் அருனசிறி மற்றும் கவீஷ் லக்பிரிய ஆகியோர் கோல் காப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். இதில் சுஜான் பெரேரா அண்மையில் மாலைதீவுகளின் பிரதான தொடரான தீவெஹி பிரீமியர் லீக்கில் (Dhivehi Premier League) ஆடிய நிலையில் இலங்கை அணியுடன் இணைந்துள்ளார் 

அதேபோன்று, அனுபவ வீரர்களான கவிந்து இஷான், ஷலன சமீர, ஷரித்த ரத்னாயக்க மற்றும் அமான் பைசர், மொஹமட் சிபான், செனால் சந்தேஷ் ஆகியோரும் அண்மையில் மாலைதீவுகளில் இடம்பெற்ற சிறிய லீக் தொடரில் விளையாடியிருந்தனர் 

எனினும், இலங்கை மீது பிஃபா விதித்திருந்த தடையின் காரணமாக ஏனைய வீரர்கள் பலரும் பிரதான தொடர் ஒன்றிலோ சர்தேசப் போட்டிகளிலோ பல மாதங்களாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

தற்போது வெளியிடப்பட்டுள்ள குழாத்தில் வெளிநாட்டு லீக்களில் ஆடும் முன்னணி வீரர் வசீம் ராசிக் உள்வாங்கப்பட்டுள்ளார். எனினும் இளம் வீரர் டிலொன் டி சில்வா உபாதை காரணமாக முதல் போட்டிக்கான இலங்கை குழாத்தில் உள்வாங்கப்படவில்லை. மேலும், இறுதியாக 2021ஆம் ஆண்டு சாப் சம்பியன்ஷிப் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண தொடர்களில் ஆடிய மார்வின் ஹமில்டன் இலங்கை அணியில் வாய்ப்பைப் பெறவில்லை 

அதேபோன்று, இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுள்ள ராஜமோகன் ஆதவன், சுரேஷ் பரத் சன்ஜய் அன்டனி, சுரேஷ் ராஹுல் கவின் அன்டனி ஆகியோரும் இலங்கை அணியில் முதல் முறை இணைக்கப்பட்டுள்ளனர். எனினும், ராஜமோகன் ஆதவனின் பிராஜவுரிமைக்கான ஆவனங்கள் பூரணப்படுத்தப்படும் பட்சத்தில் அவர் இலங்கை அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்.   

மேலும், இலங்கை குழாத்துடன் சவூதி அரேபியா பயணித்துள்ள ஆசிகுர் ரஹ்மான் யேமனுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார் 

இந்த தொடருக்கான இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஸ்கொட்லாந்து நாட்டவரான ஆண்ட்ரூ மோரிசன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது 

இலங்கை குழாம்  

ஷரித்த ரத்னாயக்க (அணித் தலைவர்), ஷமோத் டில்ஷான் (உப தலைவர்), ஹர்ஷ பெர்னாண்டோ, ஷலன சமீர, சுஜான் பெரேரா, பிரபாத் றுவன் அருனசிறி, அமான் பைசர், கவீஷ் லக்பிரிய, செனால் சந்தேஷ், மரியதாஸ் நிதர்சன், அபீல் மொஹமட், ஜூட் சுபன், மொஹமட் ஆகிப், வசீம் ராசிக், மொஹமட் சிபான், ஷதுரங்க மதுஷான், மொஹமட் சபீர், றிப்கான் மொஹமட், கவிந்து இஷான், பசால் நைசர், மொஹமட் ஹஸ்மீர், சுரேஷ் பரத் சன்ஜய் அன்டனி, சுரேஷ் ராஹுல் கவின் அன்டனி, ராஜமோகன் ஆதவன்(ஆவனங்கள் பூரணப்படுத்தப்படும் பட்சத்தில்) 

>>மேலும்கால்பந்துசெய்திகளுக்கு<<