ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Hong Kong Sixes 2024

85
Hong Kong Sixes 2024

ஹாங்காங் சிக்சஸ் தொடரில் களமிறங்கும் இலங்கை அணியின் தலைவராக சகலதுறை வீரர் லஹிரு மதுசங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஹாங்காங் சிக்சஸ் 2024 (Hong Kong Sixes 2024) தொடர் டின் குவாங் சாலை கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இம்முறை போட்டித் தொடரில் இலங்கை, பாகிஸ்தான் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, ஹாங்காங், நேபாளம், நியூசிலாந்து, ஓமான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 12 அணிகள் விளையாடவுள்ளன. 

இந்த 12 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோத உள்ளன. தொடர்ந்து நொக் அவுட் சுற்றுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், மொத்தம் 29 போட்டிகள் நடைபெற உள்ளன 

இந்த நிலையில், இலங்கை அணி இடம்பெற்றுள்ள D குழுவில் பங்களாதேஷ் மற்றும் ஓமான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், இம்முறை ஹாங்காங் சிக்சஸ் தொடரில் களமிறங்கவுள்ள  7 பேர் கொண்ட இலங்கை குழாம் விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (20) வெளியிட்டுள்ளது 

சகலதுறை வீரர் லஹிரு மதுசங்க தலைமையிலான இலங்கை அணியில் சந்துன் வீரக்கொடி விக்கெட் காப்பாளராக செயல்படவுள்ளார். அதேபோல, அதிரடி வீரர் தனுக தாபரே, தனஞ்சய லக்ஷான், லஹிரு சமரகோன், நிமேஷ் விமுக்தி மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகிய வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர் 

இதில் தனஞ்சய லக்ஷான் மற்றும் லஹிரு சமரகோன் ஆகிய இருவரும் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர்களாகவும், நிமேஷ் விமுக்தி மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர்களாகவும் அணியில் இடம்பெற்றுள்ளதுடன், இந்த அனைத்து வீரர்களும் துடுப்பாட்டத்திலும் அதிரடியாக விளையாடுகின்ற திறமையைக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

கிரிக்கெட்டில் புதுமையை புகுத்தி ரசிகர்களை மகிழ்விப்பதற்காக இந்த தொடர் கடந்த 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஒரு அணியில் மொத்தம் ஆறு வீரர்கள் மட்டுமே விளையாடும் இந்தத் தொடர் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டது. 

அதில் ஒரு போட்டியில் ஒவ்வொரு அணியில் உள்ள விக்கெட் காப்பாளரை தவிர்த்து எஞ்சிய 5 வீரர்களும் 5 ஓவர்கள் பந்து வீச வேண்டும். இறுதிப்போட்டியாக இருந்தால் 8 பந்துகளை கொண்ட 5 ஓவர்கள் பந்து வீச வேண்டும். இந்த தொடரில் Wide பந்து மற்றும் No-ball ஆகியவற்றுக்கு 2 ஓட்டங்கள் வழங்கப்படும். அதே போல வீரர் ஒருவர் 31 ஓட்டங்களை தொட்டுவிட்டால் அந்த வீரர் ரிட்டையர்ட் நொட் அவுட்டாகி செல்ல வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் 

18 தடவைகள் நடைபெற்றுள்ள இந்தப் போட்டித் தொடரை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது 

இந்த தொடரில் 1996ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளும், 2005ஆம் ஆண்டு இந்தியாவும், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவும் சம்பியனாகத் தெரிவாகின. இலங்கை அணி 2007இல் சம்பியனாகத் தெரிவாகியதுடன், 1993 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது 

இதேவேளை, கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடர் தற்போது 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைபெற உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அத்துடன், சீன மக்கள் குடியரசு ஆரம்பமாகி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு ஹாங்காங் சிக்சஸ் தொடரின் இறுதி நாளில் மகளிர் கண்காட்சி போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இலங்கை அணி விபரம் 

லஹிரு மதுசங்க (தலைவர்), சந்துன் வீரக்கொடி (விக்கெட் காப்பாளர்), தனுக தாபரே, தனஞ்சய லக்ஷான், லஹிரு சமரகோன், நிமேஷ் விமுக்தி மற்றும் தரிந்து ரத்நாயக்க  

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<