சுதந்திர கிண்ணத்திற்கான இலங்கை அணி இதுதான்

1599

மார்ச் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண முக்கோண T20 தொடரில் விளையாடவிருக்கும் 15 பேர் அடங்கிய இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபையானது (SLC) இன்று (28) வெளியிட்டிருக்கின்றது.

[rev_slider LOLC]

பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரின் போது காயத்திற்கு உள்ளாகிய அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதையிலிருந்து மீளாத காரணத்தினால், இந்த குழாமில் உள்ளடக்கப்படவில்லை. மெதிவ்ஸ் இல்லாத இலங்கையை டெஸ்ட் அணித் தலைவரான தினேஷ் சந்திமால் வழிநடாத்துகின்றார்.

இதேவேளை, பங்களாதேஷ் அணிக்கெதிரான T20 தொடரில் இலங்கை குழாமில் உள்வாங்கப்பட்டிராத வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் இத்தொடருக்கான இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டு அவருக்கு உபதலைவர் பதவியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

>> சுதந்திர கிண்ணத்திற்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

லக்மாலோடு சேர்த்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையை காயத்தில் இருந்து மீண்டிருக்கும் வீரர்களான துஷ்மந்த சமீர, நுவன் பிரதீப் ஆகிய வீரர்கள் தொடரில் முன்னெடுக்கவிருக்கின்றனர்.

காயத்திற்கு உள்ளாகிய மற்றுமொரு வீரரான குசல் ஜனித் பெரேராவும் அணிக்கு திரும்பி இருப்பதோடு விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்லவுக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கின்றது.

தோள்பட்டை உபாதை காரணமாக இத்தொடரில் விளையாட இயலாது போயிருக்கும் சகலதுறை வீரரான அசேல குணரத்வின் இடத்தை நிரப்ப தனஞ்சய டி சில்வா அழைக்கப்பட்டிருக்கின்றார். நம்பிக்கை அளிக்கக்கூடிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சில்வா வலதுகை சுழல் பந்துவீச்சாளர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணிக்கெதிராக இறுதியாக நடைபெற்றிருந்த T20 தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியிருந்தது. இந்த வெற்றிகர குழாமில் அடக்கப்பட்டிருந்த சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்செய், வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாந்து ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கை அணியின் 70 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் விதமாக இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பங்குபெறும் இந்த சுதந்திர கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது.

இலங்கை குழாம்: தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), சுரங்க லக்மால் (உப தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக்க, தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், தசுன் சானக்க, குசல் பெரேரா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, அகில தனஞ்சய, அமில அபொன்சோ, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர