கடந்த 2016ஆம் அண்டில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் நாட்காட்டியில் குறிப்பிடும் விதத்தில் இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளையும் வெற்றிகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
>> கிரிக்கெட்
உலகில் பலம் மிக்க டெஸ்ட் அணி என்று கருதப்படும் அவுஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாக வெற்றி கொண்டது. இதன்மூலம் இலங்கை அணி வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய அணியை வைட்வொஷ் செய்த பெறுமையையும் பெற்றது.
இலங்கை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட டி.எம் டில்ஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது இறுதிப் போட்டியாக அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்ற T-20 போட்டியில் இலங்கை அணி சார்பாக விளையாடினார்
>> கால்பந்து
இலங்கையின் முதல்தர கால்பந்து தொடர்களில் ஒன்றான FA கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் ரினௌன் கால்பந்து கழகத்தை வீழ்த்தி இலங்கை ராணுவப்டை அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
கடந்த வருடத்திற்கான டிவிஷன் 1 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குருநாகல் பெலிகன்ஸ் அணியை வெற்றி கொண்ட மொறகஸ்முல்ல யுனைடட் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
முன்னணி பாடசாலை கால்பந்து அணிகள் பங்கு கொள்ளும் கொத்மலே கிண்ணத் தொடரில் கொழும்பு ஸாஹிரா கால்லூரி அணி கடந்த வருடம் சம்பியனாகியது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ் பத்திரிசியார் கல்லூரி அணியை ஸாஹிரா கல்லூரி அணி வீழ்த்தியிருந்தது.
>> ரக்பி
கடந்த வருடம் இடம்பெற்ற அணிக்கு ஏழு பேர் கொண்ட 20 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசிய ரக்பி சம்பியன்சிப் தொடரில் இலங்கை கனிஷ்ட அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. இது இலங்கை அணி ஆசிய ரக்பி கிண்ணம் ஒன்றை வென்ற முதல் சந்தர்ப்பமாகும்.
பாடசாலை அணிகளுக்கு இடையிலான மைலோ ஜனாதிபதிக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் ரோயல் கல்லூரியை வீழ்த்திய இசிபதன கல்லூரி சம்பியனாகத் தெரிவாகியது.
அதேபோன்று, கடந்த வருடத்திற்கான பாடசாலைகளுக்கு இடையிலான லீக் போட்டிகளிலும் இசிபதன கல்லூரி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
>> கரப்பந்து
டயலொக் ஜனாதிபதிக் கிண்ண கரப்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் தெபகம ரன்தரு அணியை வீழ்த்திய கடான ஐக்கிய அணி சம்பியனாகத் தெரிவாகியது.
>> கூடைப்பந்து
மகளிருக்கான தெற்காசிய கூடைப்பந்து சம்பியன்சிப் தொடரில் இலங்கை மகளிர் அணி வீராங்கனைகள் சம்பியன் பட்டத்தை வென்று சங்கப் பதக்கத்தை் பெற்றுக்கொண்டனர்.
>> தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள்
முதன்முறையாக யாழ் மண்ணில் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மொத்தமாக 254 பதக்கங்களை (113 தங்கம், 74 வெள்ளி,67 வெண்கலம்) சுவீகரித்த மேல் மாகாண அணி முதல் இடத்தைப் பிடித்ததுடன் ஜனாதிபதி சவால் கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டது.
42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மகளிர் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் 3.41 மீட்டர் உயரம் பாய்ந்து முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனிதா, தேசிய மட்டத்தில் புதிய சாதனையை நிலைநாட்டினார்.