சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் தலைவர் தனன்ஜய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் தனன்ஜய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு சதங்களை பதிவுசெய்தனர்.
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்
தனன்ஜய டி சில்வா முதல் இன்னிங்ஸில் 102 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 108 ஓட்டங்களையும் விளாசியிருந்தார். இதன் மூலம் துடுப்பாட்ட தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேநேரம் தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் கமிந்து மெண்டிஸ் சதமடித்திருந்தார். முதல் இன்னிங்ஸில் இவர் 102 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 164 ஓட்டங்களையும் விளாசியிருந்தார். குறித்த இந்த பிரகாசிப்புகளின் மூலம் ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் இடம்பெற்று 64வது இடத்தை பிடித்துள்ளார்.
இதேவேளை பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை இலகுவாக்கியிருந்த கசுன் ராஜித 6 இடங்கள் முன்னேறி 38வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கசுன் ராஜிதவை தவிர்த்து விஷ்வ பெர்னாண்டோ 7 இடங்கள் முன்னேறி 43வது இடத்தையும், லஹிரு குமார 6 இடங்கள் முன்னேறி 46வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையை பொருத்தவரை துடுப்பாட்ட வரிசையில் கேன் வில்லியம்சன், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதலிடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<