20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மத்திய ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கையில் உள்ள சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனமும், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போட்டித் தொடரில் வரவேற்பு நாடான இலங்கை, கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், நேபாளம் மற்றும் மாலைதீவுகள் ஆகிய 6 நாடுகள் பங்குபற்றவுள்ளன.
இலங்கை அணி நாளை மாலை 4.00 மணிக்கு நேபாளத்துடன் தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது. அதற்கு முன்னதாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் பிற்பகல் 1.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளதுடன், பிற்பகல் 3.00 மணிக்கு அங்குரார்ப்பண விழா இடம்பெறவுள்ளது.
- ஈரானை வீழ்த்தி இலங்கை கரப்பாந்தாட்ட அணி வரலாற்று வெற்றி
- இலங்கை தேசிய கரப்பந்து அணியில் மலையக வீராங்கனை திலக்ஷனா
- வடமாகாண சம்பியனாகிய யாழ் மாவட்ட அணி
இந்த நிலையில் முதல் சுற்றின் கீழ் ஒரே நாளில் 3 போட்டிகள் நடைபெறும், அந்தப் போட்டிகள் எதிர்வரும் 10ஆம் திகதி முடிவடையும். பின்னர் 11ஆம் திகதி 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் 5ஆவது இடத்திற்கான போட்டியும்; இடம்பெறும். கடைசி நாளான 12ஆம் திகதி 3ஆவது இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டித் தொடரில் சம்பியனாகும் அணியும், 2ஆவது இடத்தைப் பிடிக்கின்ற அணியும் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கரப்பந்து சம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெறும்.
இதனிடையே, இம்முறை போட்டித் தொடரில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும். இது தவிர, இந்தப் போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய மிகவும் மதிப்புமிக்க வீரர் உள்ளிட்ட 8 பேருக்கு விசேட விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த நிலையில், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மத்திய ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அங்குரார்;ப்பண நிகழ்வு நாளை (06) பிற்பகல் 3.00 மணியளவில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே. மகேஸ்வரன் தலைமையிலும், இறுதிப் போட்டி உட்பட பரிசளிப்பு விழா ஒக்டோபர் 12ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மத்திய ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இலங்கையின் நம்பர் 1 விளையாட்டு தொலைக்காட்சியான ThePapare TV HD (Dialog TV Ch.126), ஒக்டோபர் 12ஆம் திகதி நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அத்துடன், இந்தப் போட்டித் தொடரின் அனைத்து போட்டிகளையும் சுகததாச உள்ளக அரங்கிற்கு வருகை தந்து இலவசமாக பார்க்க முடியும் என இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<