அபு தாபியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறவுள்ளது.
மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் மொத்தமாக 10 அணிகள் இரண்டு குழுக்களின் கீழ் விளையாடவுள்ளன. இதில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
>>பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராகும் முஷ்டாக் அஹ்மட்
இந்த தொடரில் விளையாடும் இலங்கை அணியானது ஸ்கொட்லாந்து, தாய்லாந்து, உகண்டா மற்றும் ஐக்கிய அமெரிக்கா அணிகளுடன் குழு A யில் இடம்பெற்றுள்ளது. குழு B யில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், வனுவாட்டு மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இலங்கை அணியானது இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி இறுதியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20I தொடரையும் வெற்றிக்கொண்டிருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் T20 உலகக்கிண்ண தொடரில் குழு 1 இல் நான்காவது இடத்தை பிடித்ததன் காரணமாக இலங்கை இம்முறை தகுதிகாண் சுற்றில் விளையாட நேரிட்டுள்ளது.
அதேநேரம் ஐசிசி T20I தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் தாய்லாந்து அணியை ஏப்ரல் 25ம் திகதி எதிர்கொள்கின்றது. அதனை தொடர்ந்து 27ம் திகதி ஸ்கொட்லாந்து அணியையும், மே முதலாம் திகதி உகண்டா அணியையும், மே 3ம் திகதி ஐக்கிய அமெரிக்க அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.
குறித்த இந்த போட்டிகளுக்கு முன்னர் இலங்கை மகளிர் அணி எதிர்வரும் 21ம் திகதி நெதர்லாந்து அணிக்கு எதிராகவும், 23ம் திகதி வனுவாட்டு அணியையும் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<