ஹேர்பேர்ட் கிண்ண இறுதிப் போட்டியில் யாழ். ஏஞ்சல், மாரிஸ் ஸ்டெல்லா பலப்பரீட்சை

500

மட்டக்களப்பு கூடைப்பந்தாட்ட திருவிழாக்களில் ஒன்றான ஹேர்பேர்ட் கிண்ணத் தொடரின், ஏழாவது பருவகாலப் போட்டிகள் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும், மியானி ஆண்கள் நகர மைதானத்திலும் இடம்பெற்றுவருகின்றது.

20 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் இந்தப் பருவகாலத்திற்கான தொடரின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (29) குழு நிலைப் போட்டிகளும், அரையிறுதிப் போட்டிகளும் நிறைவுற்றிருந்தன.

குழு நிலைப் போட்டிகள்

புனித மைக்கல் கல்லூரி அரங்கில் கொழும்புப் பாடசாலைகளான ஸாஹிரா கல்லூரிக்கும், வெஸ்லி கல்லூரிக்கும் இடையில் குழு A இற்கான போட்டியொன்று இரண்டாம் நாளின் ஆரம்பத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியின் முதல் இரண்டு கால்பகுதிகளையும் ஸாஹிரா கல்லூரியினர் முறையே 19:14, 16:05 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினர். எனினும், மூன்றாம் கால்பகுதி 06:19 என வெஸ்லி வீரர்களின் வசமானது. இறுதிக் கால்பகுதியை, ஸாஹிரா கல்லூரி 12:08 எனத் திரும்பவும் கைப்பற்றி முடிவில், 54:46 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெஸ்லி வீரர்களை தோற்கடித்திருந்தனர்.

இவ்வெற்றியோடு, ஸாஹிரா கல்லூரி குழு A இல் எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாத அணியாக புள்ளி அட்டவணையிலும் முதலிடம் பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகும் முதல் அணியாகவும் மாறியது. மறுமுனையில் இத்தொடரில் தாம் பங்குபற்றிய எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறாமல் கொழும்பு வெஸ்லி கல்லூரி வெளியேறியது.

ஹேர்பேர்ட் கிண்ணத்தின் முதல் நாளில் ஸாஹிரா கல்லூரி ஆதிக்கம்

புனித மைக்கல் கல்லூரி அரங்கில் இடம்பெற்றிருந்த மற்றுமொரு குழு A இற்கான போட்டியில், அரங்கின் சொந்தக்காரர்களான புனித மைக்கல் கல்லூரியினர், கண்டி திரித்துவக் கல்லூரியினரை 30 புள்ளிகள் வித்தியாசத்தில் 62:32 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபாரமாக வீழ்த்தியிருந்ததோடு மொத்தமாக இரண்டு வெற்றிகளுடன் குழு A இல் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய மற்றுமொரு அணியாகவும் மாறினர். திரித்துவக் கல்லூரி அணி ஒரு வெற்றியுடன் தொடரை முடித்துக் கொண்டது.

குழு B சார்பாக இத்தொடரில் பங்கேற்றிருந்த நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி, மியானி ஆண்கள் நகர மைதானத்தில் முடிந்த போட்டிகளில் யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையை 67:52 என்ற புள்ளிகள் கணக்கிலும், புனித பேதுரு கல்லூரியை 56:61 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் தோற்கடித்து, தமது குழுவில் எந்தவொரு போட்டிகளிலும் தோல்வியுறாமல் புள்ளிகள் அட்டவணையில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் அரையிறுதிப் போட்டிக்கும் முன்னேறியிருந்தது.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியிடம் தோல்வியடைந்திருந்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை, மஹிந்த கல்லூரியை 65:34 என்ற புள்ளிகள் அடிப்படையில் அதிரடியாக வீழ்த்தியதுடன், மொத்தமாக இரண்டு வெற்றிகளுடன் குழு B இல் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு B குழுவிலிருந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய அடுத்த அணியாக மாறினர்.

குழு B இல் இருந்து வந்த மற்றைய பாடசாலைகளில் ஒன்றான கொழும்பு பேதுரு கல்லூரி காலி மஹிந்த கல்லூரியை 56:48 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியொன்றுடன் தொடரில் இருந்து விடைபெற, B குழுவில் எந்தவொரு வெற்றியுமின்றி காலி மஹிந்த கல்லூரி அணி வெளியேறியது.

முதல் அரையிறுதி – ஸாஹிரா கல்லூரி எதிர் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை

குழு நிலைப் போட்டிகளின் அடிப்படையில் குழு A இல் முதலிடத்தைப் பெற்ற ஸாஹிரா கல்லூரி அணியும், குழு B இல் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட ஏஞ்சல் சர்வதேச பாடசாலையும் புனித மைக்கல் கல்லூரி மைதானத்தில் நடந்த தீர்மானமிக்க இப்போட்டியில் மோதியிருந்தன.

போட்டியில் புள்ளிகளுக்கான நுழைவாயிலை ஸாஹிராக் கல்லூரியின், ஷாரிக் 2 புள்ளிகளுடன் திறந்து வைத்தார். மறுமுனையில், ஏஞ்சல் சர்வதேச பாடசாலைக்காக சஜிந்தரம் முதல் புள்ளிகளைப் பெற்றுத் தந்திருந்தார்.

தொடர்ந்து முதல் கால்பகுதியில் சக வீரர்களுடன் யூசுப் 06 புள்ளிகளை ஸாஹிராவுக்கு மொத்தமாகப் பெற்றுக் கொடுக்க, முதல் பாதியை ஸாஹிரா அணியினர் 15:14 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிக் கொண்டனர்.

இரண்டாம் கால்பகுதியில் யாழ். வீரர்கள் பலமான தடுப்பு அரண் ஒன்றை அமைத்து ஆட்டத்தில் முன்னேறினர். ஸாஹிரா கல்லூரிக்கு இக்கால்பகுதியில் 06 புள்ளிகளை மாத்திரமே பெற முடியுமாக இருந்தது. எனினும், ப்ரீ த்ரோக்கள் (Free Throws) மூலமும் சிம்ரோன், சஜிந்திரம் ஆகியோரின் சிறப்பாட்டத்தின் மூலமும் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை 17 புள்ளிகளை மொத்தமாகப் பெற்றுக் கொண்டது. இதன்படி, முதல் பாதி ஆதிக்கம் 31:21 என்ற புள்ளிகள் கணக்கில் ஸாஹிராவிடம் இருந்து ஏஞ்சல் சர்வதேச பாடசாலைக்கு கைமாறியது.

மூன்றாம் கால்பகுதியில் ஸாஹிரா கல்லூரியினர் தொடர்ச்சியாக செய்த தவறுகளின் மூலம் எதிரணிக்கு ப்ரீ த்ரோக்களை கொடுத்தனர். அத்தோடு சிம்ரோன், சஜிந்திரம் ஆகியோர் தமது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி இருந்ததுடன், இப்பகுதியில் 26 புள்ளிகளை அள்ளியிருந்தனர். ஆனால், ஸாஹிராவினால் 11  புள்ளிகளையே பெற முடிந்தது. எனவே, மூன்றாம் கால்பகுதி 57:32 என மீண்டும் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையின் ஆதிக்கத்துடனேயே முடிந்தது.

ஹேர்பேர்ட் கிண்ண இரண்டாம் நாள் புகைப்படங்களைப் பார்வையிட

இறுதிக் கால்பகுதியில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையை விட 25 புள்ளிகள் பின்னடைவாக காணப்பட்டிருந்த காரணத்தினால், ஸாஹிரா கல்லூரிக்கு போட்டியில் வெற்றிபெற மிகவும் குறைவான சந்தர்ப்பமே காணப்பட்டிருந்தது. இப்பகுதியிலும் மூன்றாம் கால்பகுதி போன்று அபாரமாக செயற்பட்ட யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை 26 புள்ளிகளை பெற்றதுடன், ஸாஹிரா அணியினர் 10 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். இதனால், ஏஞ்சல் சர்வதேச பாடசாலை 41 புள்ளிகள் வித்தியாசத்தினால் 42:83 என அதிரடி வெற்றி ஒன்றைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இப்போட்டியின் பின்னர் ThePapare.com இற்கு கருத்து தெரிவித்த ஸாஹிரா கல்லூரியின் பொறுப்பதிகாரி அஹ்னாப் கான், “நாங்கள் குழு A இல் முதலிடத்தைப் பெற உதவியாக இருந்த முக்கிய வீரர்கள் இருவர் இப்போட்டியில் உபாதையினால் பிரகாசிக்கத் தவறிவிட்டனர். அது எங்களது தோல்விக்கு முக்கிய காரணம். மட்டக்களப்பில் முதல் தடவையாக வந்து விளையாடியதில் மகிழ்ச்சி “ எனக் கூறியிருந்தார்.

ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியின் பயிற்றுவிப்பாளர் J. ஜெசந்தன் பேசியிருந்த போது, “நாம் எமது குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த போதிலும், ஸாஹிரா கல்லூரியை வீழ்த்தியிருக்கின்றோம். மிகவும் கஷ்டங்களுடனேயே இத்தொடரில் பங்கேற்றிருக்கின்றோம். நாங்கள் தேசியமட்டப் போட்டிகளில் இரண்டு தடவைகள் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கின்றோம். எனவே, இறுதிப் போட்டியிலும் வெற்றிபெற நம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்றார்.

இரண்டாவது அரையிறுதி – புனித மைக்கல் கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

புனித மைக்கல் கல்லூரி கூடைப்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இந்த தீர்மானமிக்க இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், குழு A இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற மைதானச் சொந்தக்காரர்களான புனித மைக்கல் கல்லூரியினரும்,  மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் மோதியிருந்தன.

போட்டியின் முதல் புள்ளி புனித மைக்கல் கல்லூரியின் தாக்குதல் வீரர்களில் ஒருவரான யதுவினால் பெறப்பட்டிருந்தது. முதல் கால்பகுதியில் புனித மைக்கல் கல்லூரிக்கு புள்ளிகள் பெறுவதில் டிலு பங்களிப்புச் செய்ய மாரிஸ் ஸ்டெல்லா சார்பாக செனுர தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து விரைவாக போட்டியில் முன்னேறிய புனித மைக்கல் கல்லூரி முதல் கால்பகுதியை 20:19 எனக் கைப்பற்றியது.

எனினும், இரண்டாம் கால்பகுதியில் மைக்கல் கல்லூரியின் பின்களத்தில் (Defence) இருந்த குறைபாடுகள் எதிரணிக்கு புள்ளிகளை வழங்க காரணமாகியிருந்தது. இப்பகுதியில் மொத்தமாக 16 புள்ளிகளை மாரிஸ் ஸ்டெல்லா சேர்க்க, புனித மைக்கல் கல்லூரி 10 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக் கொண்டது. எனவே, ஆட்டத்தின் முதல் அரைப்பகுதி 35:30 என மாரிஸ் ஸ்டெல்லாவின் முன்னிலையுடன் முடிந்தது.

மூன்றாம் கால்பகுதியில், மீண்டும் செனுரவினால் மாரிஸ் ஸ்டெல்லா  புள்ளிகளை அதிகரித்துக் கொண்டது. எனினும், மைக்கல் கல்லூரியினரும் தங்களது அபாரத்தை காட்டத்தவறவில்லை. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 14 புள்ளிகளையும், மைக்கல் கல்லூரி வீரர்கள் 13 புள்ளிகளையும் சேர்த்திருந்தனர்.

எனவே, மூன்றாம் கால்பகுதியில் ஒரு புள்ளியினால் எதிரணியை விட முன்னிலை வகித்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மூன்றாம் கால்பகுதியை 49:43 எனக் கைப்பற்றியது.

எனது தந்தையின் கனவு நனவாகியிருக்கின்றது – மொஹமட் முஸ்தாக்

நான்காம் கால்பகுதியில், மிக துரிதமாக செயற்பட்ட மட்டக்களப்பு வீரர்கள் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் புள்ளிகளை நெருங்கினர். இப்படியாக ஒரிரு கட்டத்தில் இரண்டு அணிகளதும் புள்ளிகள் சமமாக மாறியிருந்தன. இது ஆட்டத்திற்கு விறுவிறுப்பை தந்தது. முடிவில் 24 புள்ளிகளை புனித மைக்கல் கல்லூரி பெற, இப்பகுதியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 20 புள்ளிகளைப் பெற்றது. இதனால் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 2 மேலதிக புள்ளிகளுடன் 69:67 என புனித மைக்கல் கல்லூரியை வீழ்த்தியதுடன் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டது.

இப்போட்டியின் பின்னர் எம்முடன் பேசிய புனித மைக்கல் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் F. பரோன் “கிட்டத்தட்ட 14 வருடங்களின் பின்னர் புனித மைக்கல் இயல்பாக கூடைப்பந்து போட்டிகளில் எப்படி விளையாடும் என்பதைக் காட்டியிருக்கின்றது. எமக்கு தோல்வியைப்பற்றிய கவலைகள் கிடையாது. இது நல்லதொரு போட்டி, மூன்றாம் இடத்திற்குரிய போட்டியில் நிச்சயம் வெற்றி பெற நம்பிக்கை உள்ளது என்றார்.”

இரண்டு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றிபெற்ற அணிகள் 2018ஆம் ஆண்டின் வெபர் கிண்ணத்துக்காக மோதும் இறுதிப் போட்டியும், மூன்றாம் இடத்திற்கான போட்டியும் இன்று (30) இடம்பெறவிருக்கின்றது.