ஹேர்பேர்ட் கிண்ண சம்பியனாக முடிசூடிய யாழ். ஏஞ்சல் சர்வதேச பாடசாலை

539

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்று முடிந்த, 2018ஆம் ஆண்டுக்கான ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியினை 79:67 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியிருக்கும் யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை தொடரின் சம்பியன் பட்டத்தினை சுவீகரித்திருக்கின்றது.

புதுப் பொலிவுடன் நடைபெறும் 2018ஆம் ஆண்டுக்கான ஹேர்பேர்ட் கிண்ணம்

ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடரின்..

மட்டக்களப்பின் கூடைப்பந்தாட்ட விளையாட்டுக்கு, ஹேர்பர்ட் அடிகளார் ஆற்றிய சேவைகளை நினைவு கூற புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர்கள் (கொழும்புக் கிளை) ஏற்பாடு செய்திருந்த இந்த கூடைப்பந்தாட்ட தொடர் ஏழாவது தடவையாக, கடந்த சனிக்கிழமை (28) ஆரம்பமாகியிருந்தது.

20 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையில் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடரில், நாடு பூராகவும் இருந்து எட்டுப் பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.  

இந்தப் பாடசாலைகள் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு தொடரின் முதல் இரண்டு நாட்களிலும் (28,29)  குழு நிலைப் போட்டிகள் நடைபெற்றிருந்தன. குழுநிலைப் போட்டிகளின் பின்னர் முதல் அரையிறுதியில்  கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணியினை 83:42 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியும், விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணியினை 69:67 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

ஏற்கனவே நடைபெற்ற குழுநிலை ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி மாரிஸ் ஸ்டெல்லாவுடன் 67:52 என தோல்வியடைந்திருந்த காரணத்தினால், மாரிஸ் ஸ்டெல்லாவின் ஆதிக்கமே இறுதிப் போட்டியிலும் இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், அந்த எதிர்பார்ப்புக்கள் அனைத்தினையும் தகர்க்கும் விதமாக யாழ். வீரர்கள் சிறப்பாட்டத்தினைக் காட்டியிருந்தனர்.

ஹேர்பேர்ட் கிண்ண இறுதிப் போட்டியில் யாழ். ஏஞ்சல், மாரிஸ் ஸ்டெல்லா பலப்பரீட்சை

மட்டக்களப்பு கூடைப்பந்தாட்ட திருவிழாக்களில் ஒன்றான…

இறுதிப் போட்டியின் முதல் புள்ளி யாழ். வீரர் சிம்ரோனினால் பெறப்பட்டிருந்தது. எனினும், அடுத்த கணத்திலேயே அரைவட்டத்திற்கு வெளியே இருந்து மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்காக செனுர மூன்று புள்ளிகளைச் சேர்த்திருந்தார். பின்னர், ஏஞ்சல் சர்வதேச பாடசாலையின் தாக்குதல் வீரரான சஜிந்திரம் மிக விரைவான பந்துப்பரிமாற்றங்கள் மூலம் தனது தரப்புக்கு புள்ளிகளை அதிகரித்துத் தந்தார்.

மொத்தமாக 11 புள்ளிகளை சஜிந்திரம் சேர்த்த நிலையில் இறுதிப் போட்டியின் முதல் கால்பகுதி 16:14 என ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியின் ஆதிக்கத்தோடு முடிவடைந்தது.  முதல் கால்பகுதியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி கல்லூரி சார்பாக அதிக புள்ளிகள் பெற்றுத்தந்த வீரராக செனுர (10) மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் இரண்டாம் கால்பகுதில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பின்களம்  (Defence) சற்றுத் தளர்வாக காணப்பட்டிருந்தது. எனவே, யாழ்ப்பாண வீரர்களான சிம்ரோன், சஞ்சய் ஆகியோர் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி தமது தரப்புக்கு இலகுவாக புள்ளிகளைப் பெற்றுத் தந்தனர். இவர்களின் துணையுடன் இந்தக் கால்பகுதியில் யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை 18 புள்ளிகளை மொத்தமாக சேர்த்திருக்க மாரிஸ் ஸ்டெல்லா அணியினரால் 13 புள்ளிகளை மாத்திரமே பெறமுடிந்தது. இதன்படி, இறுதி ஆட்டத்தின் முதல் அரைப்பகுதியினையும் 34:27 என யாழ். வீரர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

ஆட்டத்தின் மூன்றாம் கால்பகுதியில் புள்ளிகள் சேர்ப்பதை ஏஞ்சல் சர்வதேச பாடசாலையின் சிம்ரோன் முதல் கால்பகுதி போன்று மீண்டும் ஆரம்பித்து வைத்தார். இப்பாதியில் சிம்ரோனோடு சேர்த்து மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கிய சஜிந்திரம் எதிரணியின் தடுப்புக்களை தாண்டி புள்ளிகள் வேட்டையினைத் தொடங்கினர்.

மறுமுனையில் மாரிஸ் ஸ்டெல்லாவுக்கு செனுரவும் தன்னால் முடிந்த முயற்சிகளை வழங்கி புள்ளிகள் பெறுவதில் உதவினார். மேலும், ப்ரீத் த்ரோக்கள் (Free Throws) மூலமும் மாரிஸ் ஸ்டெல்லாவுக்கு புள்ளிகள் கிடைத்தன. இதன் அடிப்படையில், மூன்றாம் கால்பகுதியில் 20 புள்ளிகளை அக்கல்லூரி பெற்றிருந்த போதிலும், யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை 23 புள்ளிகளுடன், 57:47 என போட்டியில் தொடர்ந்து ஆதிக்கத்தினை நீடித்தது.

Photo Album – Herbert Cup 2018 (Basketball) – Day 2

மூன்றாம் கால்பகுதியின் நிறைவின் போது பத்துப் புள்ளிகளால் மாரிஸ் ஸ்டெல்லாவினை விட முன்னிலையில் இருந்த யாழ். ஏஞ்சல் சர்வதேச பாடசாலை இறுதிக் கால்பகுதியில் 22 புள்ளிகளைப் பெற்றதுடன்,  மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 20 புள்ளிகளினையே சேர்த்திருந்து.

எனவே, 12 புள்ளிகள் வித்தியாசத்தில் 79:67 என மாரிஸ் ஸ்டெல்லாவை வீழ்த்தி 2018ஆம் ஆண்டுக்கான ஹேர்பேர்ட் கிண்ண தொடரின் வெற்றியாளர்களாக யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி நாமம் சூடியது.  

மூன்றாம் இடத்திற்கான போட்டி

ஹேர்பேர்ட் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த கொழும்பு ஸாஹிரா கல்லூரிக்கும், புனித மைக்கல் கல்லூரிக்கும் மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் இடம்பெற்றிருந்தது.

ஆட்டத்தின் முதல் இரண்டு கால்பகுதிகளையும் முறையே 17:15, 16:14 என மைக்கல் வீரர்கள் தம்முடையதாக்கினர். மூன்றாம் கால்பகுதியினை 20:15 என ஸாஹிரா கல்லூரி தமக்கு சொந்தமாக்கிய போதிலும், இறுதிக் கால்பகுதியில் அபாரம் காட்டிய மைக்கல் கல்லூரியின் இளம் வீரர்கள் இப்பாதியினை 28:09 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினர்.  எனவே, 76:58 என புனித மைக்கல் கல்லூரி போட்டியில் வெற்றி பெற்றதுடன் தொடரில் மூன்றாம் இடத்தினைப் பெற்ற அணியாகவும் மாறினர்.

இவை தவிர ஹேர்பேர்ட் கிண்ணத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மறைந்த பொலிஸ் அதிகாரி I.T. கனகரத்தினம் அவர்களை நினைவு கூறும் விதமாக, பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் மட்டக்களப்பு அணிக்கும் சினேகபூர்வ கூடைப்பந்துப் போட்டியொன்று “I.T. சவால் கிண்ணம்என்ற பெயரில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில், பொலிஸ் விளையாட்டுக் கழகம் 57:49 என மட்டக்களப்பு அணியினை வீழ்த்தி வெற்றியினைச்  சுவீகரித்திருந்தது.

தேசிய அணி வீராங்கனைகளுடன் மோதிய யாழ் வலைப்பந்து அணிக்கு 2ஆம் இடம்

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் யாழ்..

இப்போட்டிகள் அனைத்திற்கும் பின்னர் ஹேர்பேர்ட் கிண்ணத் தொடரின் வெற்றியாளர்களாக மாறிய ஏஞ்சல் சர்வதேச பாடசாலைக்கு J. ஜெசந்தன் கருத்து தெரிவித்த போது நாங்கள் இதோடு சேர்த்து மூன்று தடவைகள் தேசிய தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியிருக்கின்றோம். இம்முறையே எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கின்றது. யாழில் இடம்பெறும் மாகாண மட்ட கூடைப்பந்து தொடர்களில் எங்களுக்கு பங்கேற்க வாய்ப்புக்கள் கிடைப்பது குறைவு. இப்படியாக எங்களுக்கு மாகாண, தேசிய தொடர்களில் பங்கேற்க வாய்ப்புக்கள் கிடைக்க எதிர்பார்க்கின்றோம். அப்படி கிடைத்தால், யாழ். மண்ணுக்கு பெருமை சேர்க்க முழுமையாக பாடுபடுவோம். “ எனக் கூறியிருந்தார்.

மிகவும் கோலாகலமாக இடம்பெற்று முடிந்திருக்கும் இந்த ஆண்டுக்கான ஹேர்பேர்ட் கிண்ணத்தில் வழமை போன்று இம்முறையும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

தொடரின் விருதுகள்

சிறந்த தாக்குதல் வீரர் – செனுர (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி)
சிறந்த தடுப்பு வீரர் – சிம்ரோன் (ஏஞ்சல் சர்வதேச பாடசாலை)
தொடரில் அதிக புள்ளிகள் எடுத்தவர் – செனுர (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி)
தொடரில் பெறுமதிமிக்க வீரர் – சஜிந்திரம் (ஏஞ்சல் சர்வதேச பாடசாலை)

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<