இலங்கை ரக்பி செவன்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க ஒப்பந்தம்

365
Peter Woods

நியூசிலாந்து ரக்பி செவன்ஸ் அணியின் முன்னாள் வீரர் பீட்டர் வூட்ஸ் இலங்கை தேசிய ரக்பி செவன்ஸ் அணிக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஆசிய ரக்பி போட்டிகளில் இலங்கை ரக்பி அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருந்தது. இதன் காரணமாக 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக ரக்பி செவன்ஸ் தொடருக்கான தகுதிகான் சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதற்கு தகுதி இலங்கை பெற்றுள்ளது.

இங்கிலாந்து செவன்ஸ் அணியின் முன்னாள் வீரர் மெத்திவ் டர்னர் தற்போதைய இலங்கை ரக்பி அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோதிலும், இலங்கை ரக்பி சங்கம் இலங்கை ரக்பி செவன்ஸ் அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முகமாக ஒரு நீண்ட கால ஒப்பந்தத்துக்கான கொடுப்பனவு தொடர்பாக பீட்டர் வூட்ஸ்சுடன் கலந்தாலோசித்து வருகிறது.

அத்துடன், இலங்கை ரக்பி செவன்ஸ் அணி எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ள போர்னியோ செவன்சிலும் பங்கேற்கவுள்ளனர். மேற்குறிப்பிட்ட போட்டித் தொடர் உலக ரக்பி செவன்ஸ் தொடருக்கான தகுதிகான் சுற்றுப் போட்டிக்கு அணியைத் தயார்படுத்துவதற்கு உதவியாக இருக்கலாம்.

எவ்வாறிருப்பினும், தகுதிகான் போட்டிகளின் பின் சரியாக ஒரு வாரத்துக்கு பின்னர் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மலேசியாவில் ஆசிய ரக்பி டிவிசன் 1 போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. மிகவும் கடினமான போட்டி அட்டவணைக்கு மத்தியில், டயலாக் ரக்பி லீக் போட்டிகளின் முடிவுகளுக்கு அமைய தனியான செவன்ஸ் அணி ஒன்றை தெரிவு செய்வதும், 15 பேர் கொண்ட தேசிய அணி ஒன்றை தேர்வு செய்வதும் மிகவும் கடினமான விடயமாகும்.

இலங்கை ரக்பி சங்கத்தின் பொதுச் செயலாளர் நசீம் மொஹமத் கருத்து தெரிவிக்கையில், ”கடந்த வருட ரக்பி செவன்ஸ் போட்டிகளில் நாம் இரண்டாவது இடத்தை பெற்று கொண்ட அதேவேளை, ஆசிய செவன்ஸிலும்  இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டோம். அதே நேரம் 18 மற்றும் 20 வயதுக்கு உட்டபட்ட எமது இளையோர் வீரர்கள் வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளில் வெற்றிகளை பெற்றார்கள். எனவே இப்போது நமது உடனடி கவனமாக ஒலிம்பிக் செவன்ஸ் ரக்பி போட்டிகள் உள்ளது” எனத்  தெரிவித்தார்.

அதே நேரம், ரக்பி வீரர்களின் நன்மை மற்றும் இலங்கை ரக்பியை கருத்தில் கொண்டு இலங்கை ரக்பி சங்கம் விளையாட்டு வீரர்களின் ஒப்பந்தங்கள் சம்பந்தமாகவும் அதனை செயற்படுத்தும் ஒழுங்கு முறையொன்றினையும் அறிமுகப்படுத்தவுள்ளது.  

புதிய பயிற்சியாளரின் தலைமையிலான பயிற்சிகளை, பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள கிளிப்போர்ட் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னதாகவோ அல்லது அதன் பின்னரோ ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.