எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை அணி நேரடித் தகுதியை பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து அணிக்கொதிராக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்ததையடுத்து இந்த வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியது.
சீரற்ற காலநிலையால் மற்றொரு நெருக்கடியில் மேற்கிந்திய தீவுகள் அணி
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி..
2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சியின் உலகக் கிண்ணப் போட்டிகளில் 10 அணிகள் விளையாடவுள்ளன.
இதன்படி, உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் அணிகள் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி தினம் செப்டம்பர் 30 ஆகும். குறிப்பிட்ட அந்தத் திகதியில் ஐ.சி.சியின் ஒருநாள் தரவரிசையின்படி முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுக் கொள்ளும். அதேநேரம், ஏனைய இரு அணிகளும் உலகக் கிண்ண தகுதிச்சுற்றில் மூலம் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.
இந்நிலையில் ஐ.சி.சி.யின் தரவரிசையில் முதல் ஏழு இடங்களிலும் உள்ள அணிகளான இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதற்கு ஏற்கனவே தகுதியைப் பெற்றுவிட்டன. ஆனாலும், முன்னாள் உலக சம்பியன்களான இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அவ்வாய்ப்பினை பெற போராடிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
குறிப்பாக, 2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு இந்த நாடுகளின் சிரேஷ்ட வீரர்களின் ஓய்வு, சம்பள முரண்பாடு போன்ற காரணங்களால் அந்த இரு அணிகளும் கடந்த 2 வருடங்களில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் தடுமாறி தரவரிசையில் முறையே 8ஆவது மற்றும் 9ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டன. எனவே 2019 உலகக் கிண்ணத்திற்கு இறுதி அணியாக வாய்ப்பினை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் அணி எது என்பது தொடர்பில் பலத்த போட்டி நிலவியது.
முன்னதாக கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான இலங்கை அணி, 2019 உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்யும் வாய்ப்பை அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 5 – 0 என்று பெற்றுக்கொண்ட தோல்வியின் மூலம் இழந்தது.
எனவே, இரு அணிகளும் 2019 உலகக் கிண்ணத்திற்குத் தகுதியை பெற்றுவிடலாம் என இலங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை நம்பியிருந்தது.
இதில், அயர்லாந்து அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையில் நடைபெறவிருந்த ஒற்றை ஒருநாள் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டதால் மேற்கிந்திய தீவுகளின் உலகக் கிண்ண நேரடிக் கனவு இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, தமது உலகக் கிண்ண கனவை நனவாக்கிக் கொள்ளும் கடைசி வாய்ப்பினை இங்கிலாந்துடன் தாம் விளையாடவுள்ள 5 ஒருநாள் போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்றால் மாத்திரமே தரவரிசையில் இலங்கையை பின்தள்ளி உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெற்றுக் கொள்ளும் நிலையில் களமிறங்கியது.
இலங்கைக்கு ஒழுங்கற்ற மைதானம் வழங்கப்பட்ட விடயம் குறித்து விசாரணை
அண்மைய இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான தொடரின் போது இலங்கை….
அதன்படி, இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று மென்செஸ்டரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவி உலகக் கிண்ணத்திற்கான நேரடித் தகுதியை இழக்க, வாழ்வா? சாவா என எதிர்பார்த்திருந்த இலங்கை அணி எட்டாவது அணியாக 2019 உலகக் கிணண்த்திற்கு நேரடித் தகுதியை உறுதிப்படுத்தியது.
இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் மார்ச் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் விளையாடி உலகக் கிண்ணத்திற்கு தகுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 2019 உலகக் கிண்ணத்திற்கு எட்டாவது அணியாக தகுதி பெற்றதையடுத்து இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க ஐ.சி.சிக்கு வழங்கிய விசேட செவ்வியில், ”ஐ.சி.சியினால் நடத்தப்படுகின்ற எந்தவொரு போட்டித் தொடரிலும் இலங்கை அணி ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த விடயம். எனவே 2019 உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்கில் தற்பொழுது முதல் திட்டங்களை வகுத்து அதற்காக உழைத்து வருகின்றோம்” என தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது எமது அணி மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றது. இவ்வாறான நேரத்திலும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள ரசிகர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இலங்கையின் கிரிக்கெட்டை மிகச் சிறந்த இடத்திற்கு விரைவில் கொண்டுவருவதற்கு அர்ப்பணிப்புடன் விளையாடுவோம் என உறுதியளித்தார்.