ஆசிய கிண்ணத்துக்கான இறுதி தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை தகுதி

AFC Asia Cup 2023

245

இலங்கை தேசிய கால்பந்து அணி, 2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண தொடருக்கான அடுத்த சுற்று தகுதிகாண் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை கால்பந்து அணி, கட்டாரில் இடம்பெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள அசிய கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாடி வந்தது.

ரொனால்டோவுக்கு இரட்டை கோல்; ஜெர்மனியை வீழ்த்திய பிரான்ஸ்

இதில், அண்மையில் நடைபெற்ற லெபனான் அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல்கள் கணக்கிலும், தென்கொரிய அணிக்கு எதிரான போட்டியில் 5-0 எனவும் தோல்வியடைந்தது. 

எனினும், கொரானா வைரஸ் அச்ச நிலையைக் காரணம் காட்டி வடகொரிய அணி இந்த தொடரில் இருந்து விலகியதையடுத்து, H குழுவில் இலங்கை அணி நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டதுடன், ஆசிய கிண்ணத்துக்கான தகுதிகாண் பட்டியலில், 4வது இடத்துக்கான குழு பட்டியலில் இணைந்துக்கொண்டது.

எனவே, 2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கால்பந்து தொடருக்கான இறுதி தகுதிகாண் போட்டிகளுக்கான வாய்ப்பை இலங்கை அணி தக்கவைத்துக்கொண்டது. 

அதன்படி, ஆசிய கிண்ணத் தொடருக்கான இறுதி தகுதிகாண் போட்டிகளில், மொத்தமாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில்,  இரண்டாவது இடத்துக்கான பட்டியலில் கடைசி மூன்று இடங்களை பிடித்த அணிகள், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கான பட்டியலில் இடம்பிடித்த தலா 8 அணிகள் மற்றும் ஐந்தாவது இடத்துக்கான பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள அணிகள் என 22 அணிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான போட்டியில்,  புள்ளிப்பட்டியலில் 36 – 39வது இடங்களை பிடித்துள்ள நான்கு அணிகளிடையில், ப்ளே ஓஃப் போட்டிகள் நடைபெற்று அதிலிருந்து இரண்டு அணிகள் தெரிவுசெய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை தேசிய அணி, தங்களுடைய தகுதிகாண் போட்டிகளில், 5வது இடத்துக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள அணிகளுடன் பலப்பரீட்சை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குறித்த போட்டிக்கான அணியை தெரிவு செய்வதற்கான குலுக்கல் நிகழ்வு எப்பொழுது நடைபெறும் என்பது குறித்து இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

>>மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க<<