கட்டாருக்கு எதிராக அபார தடுப்புக்களை மேற்கொண்ட முர்ஷித்

270

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான AFC கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் தமது முதல் மோதலில் இலங்கை இளையோர் அணி கட்டார் அணியிடம் 5-1 கோல்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது. 

எனினும், பலம் மிக்க கட்டார் அணி வீரர்கள் மேற்கொண்ட சிறந்த கோல் முயற்சிகள் பலவற்றை இலங்கை கோல் காப்பாளர் மொஹமட் முர்ஷித் அபாரமாகத் தடுத்தமை கட்டார் அணியின் மேலும் பல கோல் வாய்ப்புக்களை இல்லாமல் ஆக்கியது. 

AFC U19 சம்பியன்ஷிப் தகுதிகாண் தொடருக்காக கட்டார் சென்றுள்ள இலங்கை அணி

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 2020ம் ஆண்டு…..

இந்த தகுதிகாண் தொடரில் B குழுவில் ஆடும் இலங்கை அணி, தமது முதல் மோதலில் கட்டார் அணியை டோஹா விளையாட்டு நகர அஸ்பயர் 5 அரங்கில் வைத்து எதிர்கொண்டது. 

போட்டி ஆரம்பமாகி 5 நிமிடங்களிலேயே கட்டார் முன்கள வீரர் மெக்கி டொம்பாரி அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்று அணியை முன்னிலை பெறச் செய்தார். 

ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை ஹெடர் செய்த மொஸ்டபா கதிர, கட்டார் அணிக்கான இரண்டாவது கோலையும் பதிவு செய்தார். 

இரண்டாவது கோல் பெறப்பட்டவுடன், இலங்கை வீரர் மொஹமட் ரிகாஸ் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக முதல் பதினொருவரில் களமிறங்காத மொஹமட் சபீர் மைதானத்திற்குள் நுழைந்தார். 

அதன் பின்னர் 20 நிமிடங்கள் கட்டார் வீரர்கள் மேற்கொண்ட அடுத்தடுத்த முயற்சிகள் அனைத்தும் இலங்கை தரப்பினரால் தடுக்கப்பட்டன. 

இதில் 39ஆவது மற்றும் 40ஆவது  நிமிடங்களில் கட்டார் வீரர்கள் மேற்கொண்ட இரண்டு அடுத்தடுத்த முயற்சிகளை இலங்கை கோல் காப்பாளர் மொஹமட் முர்ஷித் சிறப்பாகத் தடுத்தார். 

Photos: Sri Lanka U19 Training Session – 2020 AFC U19 Championship Qualifiers

ThePapare.com | Waruna Lakmal | 01/11/2019 Editing and re-using….

எனினும், அடுத்த 4 நிமிடங்களில் கட்டார் வீரர் மேற்கொண்ட கோலுக்கான முதல் உதையை முர்ஷித் தடுக்க, தன்னிடம் வந்த பந்தை மெக்கி டொம்பரி கோலுக்குள் செலுத்தி தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார். 

அடுத்த நிமிடம் இலங்கை அணி போட்டியில் தமது முதலாவது கோலைப் பெற்றது. மத்திய களத்தில் பந்தைப் பெற்ற மொஹமட் சபீர், மிக நீண்ட தூரத்தில் இருந்து வேகமாக பந்தை கம்பங்களுக்குள் செலுத்தினார். இதன்போது கட்டார் கோல் காப்பாளர் பந்தை தடுக்க தயாராக முன்னரே பந்து கம்பங்களுக்குள் சென்றது. 

முதல் பாதி: கட்டார் 3 – 1 இலங்கை 

இரண்டாம் பாதியில் 53ஆவது நிமிடத்தில் கட்டார் வீரர்கள் தமக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது மேற்கொண்ட கோலுக்கான முயற்சியையும் முர்ஷித் வெளியே தட்டி விட்டார். 

59ஆவது நிமிடத்தில் கட்டார் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்து இலங்கை வீரர் அவிஷ்க தேஷானின் காலில் பட்டு கோலுக்குள் செல்ல, அது ஓன் கோலாக மாறியது. 

அடுத்த 4 நிமிடங்களுக்குள் கட்டார் வீரர்களிடையே இடம்பெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர், தனியே இருந்த ஜஸ்ஸிம் அல்சர்ராவிடம் வந்த பந்தை அவர் இலகுவாக கோலுக்குள் செலுத்தி கட்டார் அணிக்கான 5ஆவது கோலைப் பதிவு செய்தார்.

அதன் பின்னரும் போட்டியின் இறுதி நிமிடம் வரை கட்டார் வீரர்களின் ஆதிக்கமே போட்டியில் இருந்தது. எனினும், அவர்களது சிறந்த கோல் முயற்சிகளை முர்ஷித் சிறப்பாகத் தடுத்தார். 

போட்டி நிறைவில், கட்டார் அணி மேலதிக 4 கோல்களினால் இலங்கையை வீழ்த்தி, இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது. 

முழு நேரம்: கட்டார் 5 – 1 இலங்கை 

கோல் பெற்றவர்கள் 

கட்டார் – மெக்கி டொம்பாரி 5’ & 44’, மொஸ்டபா கதிர 19’, அவிஷ்க தேஷான் 59’ (Own Goal), ஜஸ்ஸிம் அல்சர்ரா 63 

இலங்கை – மொஹமட் சபீர் 45’ 

இதேவேளை, B குழுவில் உள்ள யேமன் மற்றும் துர்க்மெனிஸ்தான் அணிகளுக்கு இடையே இதே மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் யேமன் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. 

இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் யேமன் அணியை எதிர்வரும் 8ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. குறித்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.10 மணிக்கு ஆரம்பமாகும்.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<