அசுர ஆட்டத்தினை வெளிக்கொணர்ந்த தினேஷ் சந்திமல்; பயிற்சிப்போட்டி சமநிலையில்

3067
Board XI vs Bangladesh

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணிக்கும் இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டி, இலங்கை தரப்பிலான அணியின் துடுப்பாட்ட ஆதிக்கத்துடன் இன்று சமநிலையில் நிறைவுற்றது.

தமிம் இக்பாலின் சதத்தின் உதவியுடன் பங்களாதேஷ் அணி வலுவான நிலையில்

நேற்று மொரட்டுவ டி சொய்ஸா மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், தமிம் இக்பால் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோரின் சிறப்பாட்டத்துடன், முதல் இன்னிங்சிற்காக 7 விக்கெட்டுகளை இழந்து 391 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ் அணி, தமது முதல் இன்னிங்சை அத்துடன் நிறுத்தியது.

அதன் பின்னர் போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில் இலங்கை பிரதிநிதிகள் கொண்ட அணிக்கு வாய்ப்பினை வழங்கியது. அதன் அடிப்படையில், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி, ரொன் சந்திரகுப்தா மற்றும் அவிஷ்க பெர்னாந்து ஆகியோருடன் மைதானம் நுழைந்தது.

வாரியத் தலைவர் அணியின் முதல் விக்கெட்டாக அவிஷ்க பெர்னாந்து, பங்களாதேஷ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமடினால், போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே போல்ட் செய்யப்பட்டார். இதனால் மூன்று ஓட்டங்களுடன் வெளியேறிய இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் பெர்னாந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனையடுத்து, புதிதாக துடுப்பாட வந்த இரோஷ் சமரசூரியவும் தஸ்கின் அஹமடினால் முன்னைய விக்கெட் பெறப்பட்ட அதே ஓவரில் ஓட்டம் ஏதுமின்றி ஆட்டமிழக்க செய்யப்பட்டார். மேலதிக சிறிய ஓட்ட இடைவெளியில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரொன் சந்திர குப்தாவும் மைதானத்தினை விட்டு வெளியேற

29 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான ஆரம்பத்தினை பெற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி, நிதானித்து துடுப்பாட தொடங்கியது.

பின்னர், களத்தில் நின்ற அணித் தலைவர் சந்திமலுடன் கை கோர்த்த ரொஷேன் சில்வா நான்காவது விக்கெட்டுகாக, சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றினை (81) வழங்கி, அணிக்கு பெறுமதி தரும் வகையில் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார்.

இதனையடுத்து, இலங்கை சார்பிலான அணியின் மத்திய வரிசையும் ஓரளவு சிறப்பான ஆட்டத்துடன் ஓட்டங்களைப் பெற்று, அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்த பங்களிப்புச் செய்தது.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி, 291 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில் தமது 7 ஆவது விக்கெட்டினை பறிகொடுத்தது. அப்போது, பின்வரிசையில் இருந்து களத்தில் நுழைந்த றோயல் கல்லூரி வீரர், ஆட்டமிழக்காது களத்தில் நின்றிருந்த தினேஷ் சந்திமாலுடன் ஜோடி சேர்ந்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையினை நானுறை தாண்ட வைத்தார்.

முடிவில், இன்றைய நாள் போட்டி நிறைவுக்கு வர, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணி, 7 விக்கெட்டுக்களை இழந்து 90 ஓவர்களிற்கு 403 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

8 ஆவது விக்கெட்டுக்காக, போட்டி நிறைவடையும் தருவாய் வரை 112 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பெற்றிருந்த தினேஷ் சந்திமல் ஆட்டமிழக்காமல் 7 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகள் உள்ளடங்களாக 190 ஓட்டங்களினைப் பெற்று, தனது மோசமான ஆட்டத்தில் இருந்து மீண்டு கொண்டார்.

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பூரண தயார் நிலையில் உள்ள 111ஆவது வடக்கின் பெரும் சமர்

மறுமுனையில் நேற்றைய நாளில் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டு இன்றைய நாளில் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்த சமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டி 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 42 பந்துகளிற்கு 50 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில், தஸ்கின் அஹமட் மொத்தமாக 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு, முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

முதல் இன்னிங்ஸ்

பங்களாதேஷ் அணி: 391/7 (90) – தமிம் இக்பால் 136, மொமினுல் ஹக் 73, லிட்டன் தாஸ் 57* , மஹ்மதுல்லா 43, சகிப் அல் ஹசன் 30, முஷ்பிகுர் ரஹிம் 21 , சாமிக்க கருணாரத்ன 3/61

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி – 403/7 (90) தினேஷ் சந்திமல் 190*, சமிக்க கருணாரத்ன 50*, ரொஷென் சில்வா 38, ருமேஷ் புத்திக்க 32, வனிது ஹஸ்ஸங்க 32, தஸ்கின் அஹமட் 41/3, முஸ்தபிசுர் ரஹ்மான் 28/2

போட்டி முடிவுபோட்டி சமநிலை அடைந்தது.