ஐ.சி.சி. தண்டனையிலிருந்து தப்பிக்க தயாராகும் சந்திமால், டூ ப்ளெசிஸ்

1067

ஒழுக்காற்று குற்றச்சாட்டில் போட்டித்தடையை பெறும் வாய்ப்பு இருந்தபோதும் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்கு வழக்கமான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சென். லூசியா டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை இரண்டு மணி நேரம் தாமதித்த குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்திருக்கும் சந்திமால் மீதான தண்டனை விபரம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

”இந்த சம்பவத்திற்கு பின்னர் நான் மேன்முறையீடு செய்தேன். என்றாலும் ஐ.சி.சி. முடிவை மதிக்க வேண்டும். மனிதன் என்ற வகையில் இது கடினமாகவே உள்ளது. அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் என்பதால் இப்போது நல்ல நிலையை உணர்கிறேன்” என்று சந்திமால் குறிப்பிட்டார்.

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடர் குறித்து விளக்கும் ஊடக சந்திப்பு கொழும்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சந்திமால் மற்றும் தென்னாபிரிக்க அணித் தலைவர் பெப் டூ ப்ளெசிஸ் இருவரும் பந்தை சேதப்படுத்தும் விவகாரம் குறித்து ஐ.சி.சி. கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்தி இருப்பது தொடர்பில் குறிப்பிட்டனர்.

”இந்த விடயம் (பந்தை சேதப்படுத்தல்) குறித்து எனக்கு இன்னும் முழுமையான தெளிவு இல்லை. ஐ.சி.சி. அதிக கடுமையான தண்டனைகளை கொண்டு வந்திருக்கிறது. என்றாலும் எது அனுமதிக்கப்பட்டது, எது அனுமதிக்கப்படவில்லை என்பது பற்றி ஐ.சி.சி. இன்னும் கூறவில்லை. சுவிங்கம் சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டதா? இல்லையா?

நீண்ட நேரம் மைதானத்தில் இருக்கும்போது வாயில் இனிப்பு வைத்திருப்பேன் என்று ஹஷிம் அம்லா கூறுவார். அது அனுமதிக்கப்பட்டதா? இல்லையா?

என்னை பொறுத்தவரை எனக்கு அது பற்றி தெளிவு தேவைப்படுகிறது. போட்டிக்கு முன்னர் நடுவரிடம் இந்த விடயம் பற்றி தெளிவைப் பெற விரும்புகிறேன். தினேஷுக்கும் அது தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்” என்று டூ ப்ளெசிஸ் குறிப்பிட்டார்.

சென். லூசியா டெஸ்டில் இலங்கை அணி பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்தே சந்திமால் மற்றும் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் மைதானத்திற்கு திரும்ப மறுத்தனர். இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நிலையில் சந்திமால் மீது நான்கு தொடக்கம் எட்டு வரையிலான போட்டி இடைநிறுத்தல் புள்ளிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திமாலுக்கு தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் தலைவராக செயற்பட வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்தும் இலங்கை அணியின் தலைவராக லக்மால்

எனினும் இலங்கை அணி இந்த தொடருக்கு தயார் நிலையில் இருப்பதாக சந்திமால் குறிப்பிட்டார். ”எந்த ஒரு விடயத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் வரும், ஆனால் அவைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றியே வீரர்கள் என்ற வகையில் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியதாகும்.

மேற்கிந்திய தீவுகளில் ஒரு சிறந்த தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பி இருக்கும் இலங்கை வீரர்கள் நல்ல மனநிலையுடன் உள்ளனர். அங்கு துடுப்பாட்ட வீரர்களுக்கு மிக கடினமான ஆடுகளங்களே கிடைத்தது. எனவே, இந்த தொடருக்கு முகம் கொடுக்க வீரர்கள் தயாராக உள்ளனர்” என்று சந்திமால் குறிப்பிட்டார்.

மேற்கிந்திய தீவுகளில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முகம்கொடுப்பதில் நெருக்கடியை சந்தித்ததை காண முடிந்தது. குறிப்பாக வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷன்னொன் காப்ரியல் மூன்று போட்டிகளிலும் மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் தென்னாபிரிக்க அணியில் ககிசோ ரபாடா, டேல் ஸ்டெயின் போன்ற உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதற்கு முகம்கொடுப்பதற்காக இலங்கை அணியின் ஏற்பாடு குறித்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர விளக்கும்போது,

”மேற்கிந்திய தீவுகளில் நாம் வித்தியாசமான ஆடுகளத்தையே எதிர்கொண்டோம். நான் மேற்கிந்திய தீவுகளுக்கு இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். இம்முறையே ஆடுகளம் மிகக் கடினமாக இருந்தது. பெரும்பாலான ஆடுகளங்களில் சில பகுதிகளில் பிளவுகள் இருந்தன, சில பகுதிகளில் அதிக புற்கள் இருந்தன. எனவே ஆடுகளங்கள் மிகவும் ஏற்றத் தாழ்வு கொண்டதாகவே இருந்தன.

இந்த தொடர் எமக்கு பரீட்சமான சூழலை கொண்டது. தென்னாபிரிக்க வேகப்பந்து வரிசைக்கு மதிப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக ரபாடா, என்னைப் பொறுத்தவரை உலகில் அதிக திறமை கொண்ட வீரராக உள்ளார். உண்மையில் இந்த தொடர் கடினமானதாக இருக்கும்.

என்றாலும் இந்த தொடரில் நாம் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை சரியாக கையாள வேண்டும். அதனை நாம் சரியாக கையாண்டால் இந்த தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று சமரவீர குறிப்பிட்டார்.

தொடர்ச்சியான சதங்களுடன் இலங்கை A அணிக்காக பிரகாசித்து வரும் திரிமான்ன

குறிப்பாக மேற்கிந்திய தீவுகளில் டியுக்ஸ் (dukes) பந்து பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த தொடர் முற்றிலும் மாறுபட்டிருந்ததாகவும் சமரவீர சுட்டிக்காட்டினார். ”டியுக்ஸ் பந்துகள் சில நேரங்களில் எத்தனை கடினமாக செயற்படும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த தொடர் அதிலிருந்தும் வேறுபட்டது. எம்மால் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை கையாள முடியும் என்று நான் நினைக்கிறேன். அந்த சவாலுக்கு நாம் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் கூக்கபுரா (kookaburra) பந்தே பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க