இலங்கை தேசிய கால்பந்து குழாத்திற்கு புதிய வீரர்கள் இணைப்பு

SAFF Championship

1141

தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கையின் ஆரம்பகட்ட வீரர்கள் குழாத்தினை இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளதுடன், இந்த குழாம் தமது வதிவிடப் பயிற்சிகளை நேற்று (27) ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடர் மாலைத்தீவுகளின் மாலே நகரில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, தொடரின் இறுதிப் போட்டி ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டது. 

SAFF சம்பியன்ஷிப் போட்டி அட்டவணை அறிவிப்பு

இந்நிலையில், இறுதியாக 2022 பிஃபா கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கான இரண்டாம் சுற்று தகுதிகாண் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை தேசிய கால்பந்து அணி, தற்போது SAFF சம்பியன்ஷிப் தொடருக்கான தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது. 

இதற்காக தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் (Coaching staff) அனைவரும் 72 மணிநேர இடைவெளியில் இரண்டு PCR பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர், நேற்று களனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் விளையாட்டுத் தொகுதியில் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் (Bio-Bubble) தமது வதிவிடப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த PCR பரிசோதனைகளின்போது கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 3 வீரர்கள் தற்போது தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் தற்போது சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாகவும் இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, ஏற்கனவே உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் இருந்த வீரர்களுடன் சேர்த்து, இன்னும் சில வீரர்களும் இந்த பயிற்சிகளுக்கான குழாத்திற்குள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். 

கட்டாருடன் A குழுவில் இலங்கை 23 வயதின்கீழ் கால்பந்து அணி

அதன்படி, ஏற்கனவே தேசிய அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களான அசேல மதுஷான், அபீல் மொஹமட், அமான் பைசர் ஆகிய வீரர்கள் மீண்டும் இந்த குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுடன், உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான குழாமில் இணைக்கப்பட்டு பின்னர் உபாதைக்கு உள்ளான கொழும்பு கால்பந்து கழகத்தின் இளம் வீரர் அப்துல் பாசித்தும் மீண்டும் தேசிய குழாமிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர் மொஹமட் சிபானும் தேசிய அணியில் இடம்பெற்றுள்ளார். 

அதேபோன்று, கோல் காப்பாளர்களாக குழாமில் இருந்த சுஜான் பெரேரா, ருவன் அருனசிறி மற்றும் தனுஷ்க ராஜபக்ஷ ஆகியோருக்கு மேலதிகமாக புளூ ஸ்டார் அணியின் கோல் காப்பாளர் கவீஷ் பெர்னாண்டோ மற்றும் டிபெண்டர்ஸ் அணியின் இளம் கோல் காப்பாளர் நுவன் கிம்ஹான ஆகியோரும் புதிதாக கோல் காப்பாளர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இதில், நுவன் கிம்ஹான உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான ஆரம்ப கட்ட குழாத்தில் இடம்பெற்றிருந்தபோதிலும் இறுதி வீரர்கள் குழாத்தில் இணைக்கப்படவில்லை. 

மீண்டும் மன்செஸ்டர் யுனைடட்டுடன் இணைந்தார் ரொனால்டோ

அதேபோன்று, இங்கிலாந்து கழகங்களுக்காக கால்பந்து ஆடிவரும் வீரர்களான மார்வின் ஹமில்டன் மற்றும் டிலன் டி சில்வா இருவரது பெயரும் குழாத்தில் இடம்பெற்றுள்ளது. எனினும், இவர்கள் SAFF சம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாவதற்கு 7 நாட்களுக்கு முன்னர் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வர்கள் (பிஃபா விதிகளுக்கு அமைய) என்று இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கை ஆரம்ப குழாம் 

சுஜான் பெரேரா (அப் கண்ட்ரி லயன்ஸ்), பிரபாத் றுவன் அருனசிறி (புளூ ஈகல்ஸ்), தனுஷ்க ராஜபக்ஷ (நியூ யங்ஸ்), ரொஷான் அப்புஹாமி (டிபெண்டர்ஸ்), ஹர்ஷ பெர்னாண்டோ (புளூ ஈகல்ஸ்), ஷமோத் டில்ஷான் (கொழும்பு), ஷரித்த ரத்னாயக்க (கொழும்பு), டக்சன் பியுஸ்லஸ் (நியூ யங்ஸ்), ஷதுரங்க மதுஷான் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மார்வின் ஹமில்டன் (பேர்கர்ஸ் ஹில் டவுன்), ஷலன சமீர (கொழும்பு), ஜூட் சுபன் (ரினௌன்), மொஹமட் முஸ்தாக் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மொஹமட் பசால் (புளூ ஸ்டார்), கவிந்து இஷான் (அப் கண்ட்ரி லயன்ஸ்), டிலன் டி சில்வா (குயின்ஸ் பார்க் ரேன்ஜர்ஸ்), வசீம் ராசிக் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மொஹமட் ஆகிப் (கொழும்பு), அசிகுர் ரஹ்மான் (டிபெண்டர்ஸ்), மொஹமட் ஹஸ்மீர் சீ ஹோக்ஸ்), சுபுன் தனன்ஜய (ரெட் ஸ்டார்ஸ்), ரிப்கான் மொஹமட் (டிபெண்டர்ஸ்), அப்துல் பாசித் (கொழும்பு), அமான் பைசர் (ரினௌன்), அசேல மதுஷான் (சீ ஹோக்ஸ்), அபீல் மொஹமட் (கொழும்பு), கவீஷ் பெர்னாண்டோ (புளூ ஸ்டார்), நுவன் கிம்ஹான (டிபெண்டர்ஸ்), மொஹமட் சிபான் (அப் கண்ட்ரி லயன்ஸ்) 

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க