சீனா – தாய்ப்பேயில் நடைபெற்று வருகின்ற கழகங்களுக்கிடையிலான ஆசியக் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை துறைமுக அதிகார சபை கரப்பந்தாட்ட அணி, இன்று (26) நடைபெற்ற ஐந்தாவது இடத்துக்கான போட்டியில் வரவேற்பு நாடான சீனா தாய்ப்பேயின் டைச்சூன் பேன்ங் கரப்பந்தாட்ட அணியை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
20 வருடங்களின் பின் மகளிர் அஞ்சலோட்டத்தில் சாதனை படைத்த இலங்கை அணி
கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…
கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ண கரப்பந்தாட்டத்தில் இலங்கை சார்பாக களமிறங்கிய லங்கா லையன்ஸ் அணி, ஏழாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. எனினும், இம்முறை போட்டித் தொடரில் களமிறங்கிய இலங்கை துறைமுக அதிகார சபை, முன்னணி அணிகளை வீழ்த்தி ஐந்தாவது இடத்தை தட்டிச் சென்றது.
இதன்படி, ஆசிய கரப்பந்தாட்ட வரலாற்றில் இலங்கை அணியொன்று பெற்றுக்கொண்ட மிகப் பெரிய வெற்றியாக இது பதிவாகியது.
ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள கழகங்களுக்கிடையிலான ஆசிய கிண்ண கரப்பந்தாட்டத் தொடர் கடந்த 18ஆம் திகதி சீனா தாய்ப்பேயில் ஆரம்பமாகியது.
12 நாடுகளைச் சேர்ந்த முன்னணி கழகங்கள் பங்கேற்றுள்ள இம்முறைப் போட்டித் தொடரில் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கரப்பந்தாட்ட சம்பின்ஷிப் தொடரில் சம்பியனாகத் தெரிவாகிய இலங்கை துறைமுக அதிகார சபை இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தது.
இதன்படி, குழு பி இல் இடம்பெற்றிருந்த இலங்கை துறைமுக அதிகார சபை அணி, முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டங்களில் துர்க்மெனிஸ்தானின் கோல்கண் கழகத்தை 3-2 செட் கணக்கிலும், இந்தோனேஷியாவின் போல்ரி ஸமாடார் கழகத்தை 3-2 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தியது.
எனினும், இறுதி லீக் ஆட்டத்தில் ஈரானின் பிரபல சர்தாரி வராமின் கழகத்திடம் 3-0 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவிய இலங்கை துறைமுக அதிகார சபை அணி, பி குழுவில் இரண்டாவது இடத்தைப் பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுக் கொண்டது.
எனவே, கழகங்களுக்கிடையிலான ஆசியக் கிண்ண கரப்பந்தாட்டத் தொடர் வரலாற்றில் இலங்கை அணியொன்று தொடர்ச்சியாக காலிறுதிக்குத் தகுதிபெற்ற இரண்டாவது சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியது. இதற்குமுன் கடந்த வருடம் இலங்கையின் லங்கா லையன்ஸ் கழகம் காலிறுதிக்குத் தகுதிபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து காலிறுதிப் போட்டியில் கட்டாரின் அல் – ரய்யான் கழகத்திடமும் 3-0 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவிய இலங்கை துறைமுக அதிகார சபை அணி, ஐந்தாவது இடத்தினை தீர்மானிக்கின்ற பிளே–ஓஃப் சுற்றில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்ட் பைடர்ஸ் அணியை நேற்று (25) எதிர்த்தாடியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை துறைமுக அதிகார சபை அணி, முதலிரண்டு செட்களையும் 25-22, 25-22 எனக் கைப்பற்ற, 3ஆவது செட்டை 31-29 என குயின்ஸ்லேன்ட் பைடர்ஸ் அணி கைப்பற்றியது.
தொடர்ந்து நடைபெற்ற 4ஆவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள், 25-21 என்ற புன்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று ஐந்தாவது இடத்துக்கான போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டனர்.
இது இவ்வாறிருக்க, ஐந்தாவது இடத்துக்காக இன்று (26) நடைபெற்ற போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபை அணி, சீனா தாய்ப்பேயின் டைச்சூன் பேன்ங் கரப்பந்தாட்ட அணியை எதிர்த்தாடியது.
ஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க
சீனாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில்…
போட்டியில் முதல் செட்டை 25-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி இலகுவாக வெற்றி கொண்டது.
தொடர்ந்து இரண்டாவது செட்டை 25-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் சீனா தாய்ப்பே அணி கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
இதனையடுத்து, மூன்றாவது செட்டை 26-24 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணியும், நான்காவது செட்டை 25-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் சீனா தாய்ப்பே அணியும் கைப்பற்றியது.
எனினும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நடைபெற்ற தீர்மானமிக்க இறுதி செட்டை 15-9 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றிய இலங்கை அணி, 3-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<