பயிற்சிப் போட்டியில் மெதிவ்ஸ், சில்வா, குணத்திலக்க ஆகியோர் அரைச்சதம்

1144

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் இன்று (7) கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாபிரிக்க அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடவிருக்கின்றது.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஜூலை 12 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவிருக்கும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க…

தென்னாபிரிக்காவின் இலங்கை சுற்றுப் பயணத்தின் ஆரம்ப கட்டமாக அடுத்த வாரம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கவிருக்கும் நிலையிலேயே, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கைத் தரப்பு அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தமதாக்கினார்.

நட்சத்திர வீரர்களான மோர்னே மோர்க்கல்,  ஏ.பி.டி. வில்லியர்ஸ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த பின்னர் அவர்கள் இன்றி தென்னாபிரிக்க அணி பங்கேற்கும் முதல் சுற்றுத் தொடர் இதுவாகும். எனினும், கடந்த ஜனவரி மாதத்திலேயே தென்னாபிரிக்காவுக்காக டெஸ்ட் போட்டியொன்றில் ஆடியிருந்த வேகப்புயலான டேல் ஸ்டெய்ன் இலங்கையுடனான சுற்றுப் பயணத்தில் அணிக்கு திரும்பியிருக்கின்றார்.

இதனையடுத்து போட்டியின் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதினொருவர் அணி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. தொடக்க வீரர்களாக தனுஷ்க குணத்திலக்க மற்றும் கெளஷால் சில்வா ஆகியோர் வந்திருந்தனர்.

மிகவும் சவால்மிக்க தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைத் தாண்டி தொடக்க வீரர்கள் இருவரினாலும் முதல் விக்கெட்டுக்காக 84 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டிருந்தது. இந்த இணைப்பாட்டத்திற்கு பாரிய பங்களிப்பை தந்திருந்த தனுஷ்க குணத்திலக்க அரைச்சதம் ஒன்றைப் பெற்று இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நடந்திருந்தார். ஆட்டமிழக்கும் போது குணத்திலக்க  66 பந்துகளுக்கு 9 பெளண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இலங்கை பதினொருவர் அணியின் இரண்டாம் விக்கெட்டுக்கும் கெளஷால் சில்வா – தனஞ்சய டி சில்வா ஜோடியினால் பெறுமதிமிக்க இணைப்பாட்டம் (68) ஒன்று பகிரப்பட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் இரண்டாம் விக்கெட்டாக தனஞ்சய டி சில்வா 27 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேற, இந்த இணைப்பாட்டத்திற்குள் கெளஷால் சில்வாவினால் அவரது 53 ஆவது முதல்தர அரைச்சதம் பூர்த்தி செய்யப்பட்டது.

தொடர்ச்சியான சதங்களுடன் இலங்கை A அணிக்காக பிரகாசித்து வரும் திரிமான்ன

சுற்றுலா இலங்கை A அணி மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள்…

தொடர்ந்த ஆட்டத்தில் புதிதாக களம் வந்த அஞ்செலோ மெதிவ்ஸ் உடன் கைகோர்த்த கெளஷால் சில்வா தனது விக்கெட்டை 76 ஓட்டங்களுடன் பறிகொடுத்தார். சில்வாவின் விக்கெட்டை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் மத்திய வரிசை விக்கெட்டுக்கள் தென்னாபிரிக்காவின் சுழலை ஈடுகொடுக்க முடியாமல் விரைவாக பறிபோயின. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான ரொஷேன் சில்வா ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார். எனினும், அஞ்செலோ மெதிவ்ஸ் மிகவும் நிதானமாக ஆடி அரைச்சதம் ஒன்றுடன் தனது தரப்புக்கு வலுச்சேர்த்தார். இதனால், இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் மொத்த ஓட்டங்களும் 250ஐ  தாண்டியது.

தொடர்ந்து மெதிவ்ஸூம் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் 8 ஆம் விக்கெட்டாக ஆட்டமிழக்க அதனை அடுத்து சில நிமிடங்களில் 78.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி 287 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸ்க்காக பெற்றுக் கொண்டது.

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதன் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 124 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள்  மற்றும் 13 பெளண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களைக் குவித்து சதமொன்றை தவறவிட்டிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் இதுவரை அவ்வணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே ஆடிய சுழல் வீரரான தப்ரைஸ் சம்ஷி 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், இதுவரையில் சர்வதேச போட்டிகள் எதிலும் விளையாடாத மற்றுமொரு சுழல் வீரரான ஷோன் வொன் பேர்க் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தார். எனினும், வேகப்பந்து வீச்சாளர்களான ககிஸோ ரபாடா, டேல் ஸ்டெய்ன், வெர்னோன் பிலாந்தர் ஆகியோரினால் விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்ற முடியாமல் போயிருந்தது.

லங்கன் பிரீமியர் லீக் T-20 தொடர் ஒத்திவைப்பு

இந்தியாவின் ஐ.பி.எல் தொடரினை ஒத்த வகையில் இந்த ஆண்டு இலங்கையிலும் நடைபெறவிருந்த…

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி போட்டியின் முதல் நாள் நிறைவில் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து காணப்படுகின்றது. தென்னாபிரிக்க அணியில் பறிபோயிருந்த விக்கெட்டாக எய்டன் மர்க்கம் காணப்பட்டிருந்தார். மர்க்கமின் விக்கெட்டை அவர் ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு கமகே கைப்பற்றியிருந்தார். களத்தில் டீன் எல்கார் 14 ஓட்டங்களுடனும், ஹஷிம் அம்லா 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

ஸ்கோர் விபரம்

போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க