ஆஸி. பாரா மெய்வல்லுனரில் இலங்கையிலிருந்து மூவர்

171
Sri Lanka Para Athletic Team Participates

அவுஸ்திரேலியா பகிரங்க பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக மூன்று இலங்கை வீரர்கள் புதுன்கிழமை (29) அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

நாளை (30) முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இந்தப் போட்டித்தொடர் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளதுடன், இதில் தினேஷ் பிரியந்த, சமித்த துலான் மற்றும் பாலித பண்டார ஆகிய வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

2020 டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் F46 போட்டியில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த, 2016 பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

அதேபோல, 2020 பாராலிம்பிக் ஈட்டி எறிதல் F64 போட்டியில் பங்குகொண்ட சமித்த துலான் வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன், 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குகொண்ட பாலித பண்டார பரிதி வட்டம் எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள பாராலிம்பிக்கில் இலங்கைக்கு பதக்கங்களை வென்று கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற வீரர்களாக இம்மூவரும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவுஸ்திரேலியா பகிரங்க பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் முகாமையாளராக பிரதீப் நிஷாந்த பெயரிடப்பட்டுள்ளார்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<