ஸ்ரீலங்கன் ஒலிம்பியன்ஸ் சங்கத்தினால் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

156

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களை உள்ளடக்கியதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் முதல் தடவையாக சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வேலைத்திட்டமொன்று கற்பிட்டி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 02 ஆம் திகதி காலை ஆரம்பமான இந்நிகழ்வில் கற்பிட்டி கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம், அப்பகுதியில் உள்ள குப்பை கூளங்களை அகற்றுதல் போன்ற சிரமதானப் பணிகள் இடம்பெற்றதுடன், இறுதியில் அழிவடைந்து வருகின்ற கண்டல் தாவரங்களை கடற்கரையை அண்மித்த பகுதிகளில் நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

>> இலங்கையின் முதற்தர போட்டிகளில் களமிறங்கும் ஜிம்பாப்வே வீரர் தைபு

இது இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கன் ஒலிம்பியன்ஸ் சங்கத்தினால் அப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சுற்றுச் சூழலை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தமது ஒலிம்பிக் அனுபவங்களையும், வீரர் ஒருவருக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் தொடர்பிலும் அவர்களுக்கு இதன் போது எடுத்துரைக்கப்பட்டன.

கற்பிட்டி பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வேலைத்திட்டத்தில் கற்பிட்டி தினுத ரிசோட் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் வசந்த குமார மற்றும் அதன் அதிகாரிகளும் இணைந்து கொண்டனர்.

இதில் 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றியிருந்த அநுருத்த ரத்னாயக்கவின் பயிற்சியாளராக வசந்த குமார செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

1948 முதல் இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 96 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுள் 67 பேர் தற்போது உயிருடன் உள்ளதுடன், இவர்களிலும் 47 பேர்தான் இலங்கையில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<