இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (09) அறிவிக்கப்பட்டது.
[rev_slider LOLC]
இதன்படி, 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை ஒரு நாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட இந்த குழாமில், 3 உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள, மணிக்கு 140 கி.மி வேகத்தில் பந்துவீசுகின்ற, அனுபவமில்லாத 21 வயதுடைய இளம் வேகப்பந்து வீச்சாளரான செஹான் மதுஷங்க முதற்தடவையாக ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அணித் தலைவராகவுள்ள மெதிவ்ஸ் உடற்தகுதி சோதனையில் தேர்வு
ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (07) நடைபெற்ற உடற்தகுதி சோதனையை இலங்கை கிரிக்கெட் …
இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் டுபாயில் நடைபெற்ற T-10 போட்டிகளில் இவர் சிறப்பாக பந்துவீசியிருந்தமை தேசிய அணியில் இடம்பெறுவதற்கான முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 2019 உலகக் கிண்ணப் போட்டிகளை கருத்திற்கொண்டு புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க செஹான் மதுஷங்கவை ஒரு நாள் அணியில் இணைத்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செஹான் மதுஷங்கவை ஒரு நாள் அணியில் இணைத்துகொள்ள நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இலங்கை அணியில் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க கருத்து பதிலளிக்கையில்,
”எம்மிடம் இரண்டு விதமாக திட்டங்கள் உள்ளன. இதில் செஹான் மதுஷங்க எம்முடைய தூர நோக்கு இலக்காக அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சைப் பலப்படுத்த மதுஷங்கவைப் போன்ற வீரரொருவர் அணிக்குத் தேவை என நாம் கருதினோம். தற்போது சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர, நுவன் பிரதீப் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளராக அணியில் உள்ளனர். எனினும், 2019இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு குறைந்தது 7 வேகப்பந்து வீச்சாளர் அணியில் இருக்க வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கு தற்பொழுது முதல் வாய்ப்பளித்தால் எதிர்காலத்தில் எமக்கு சிறந்த பலனைக்கொடுக்கும் என நாம் கருதுகிறேன்” என்றார்.
அதேநேரம் இலங்கை ஒரு நாள் அணிக்காக விளையாடுவதற்கு பெரிதும் எதிர்பார்த்திருந்த லசித் மாலிங்கவுக்கு இத்தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், சுரங்க லக்மால், நுவன் பிரதீப் ஆகியோருடன் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் முத்தரப்பு ஒரு நாள் தொடரிற்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு
பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் 15…
இந்நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தும் நோக்கில் இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த இளம் வலதுகை துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். அண்மைக்காலமாக ஒரு நாள் போட்டிகளில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்ற டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலும் மீண்டும் ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஒரு நாள் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தமை குறித்து தினேஷ் சந்திமால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில், ”ஒரு நாள் அணியில் மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. பயிற்சியாளர் என் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடியுள்ளேன். எனினும், கடந்த வருடம் பின்னடைவை சந்தித்தேன். எனவே, இத்தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.
இதேநேரம், அண்மையில் நிறைவடைந்த இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாடிய லஹிரு திரிமான்ன மற்றும் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முன்னதாக 23 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம்பெறாத சகலதுறை ஆட்டக்காரரான வனிந்து ஹசரங்க மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பெற்றுள்ளார். தற்போது நடைபெற்று வருகின்ற உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி வருகின்ற வனிந்து ஹசரங்க, அண்மையில் நடைபெற்ற போட்டியில் சதம் குவித்து அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இளம் சுழற்பந்துவீச்சாளரான ஜெப்ரி வெண்டர்சேவை உபாதை காரணமாக ஒரு நாள் அணியில் இருந்து நீக்குவதற்கு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ள அதேநேரம், முத்தரப்பு ஒரு நாள் தொடரில் சுழற்பந்து வீச்சாளராக அகில தனஞ்சய மற்றும் லக்ஷான் சந்தகென் ஆகியோர் செயற்படவுள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் மற்றும் T-20 தொடரில் இலங்கை அணியின் தலைவராகக் கடமையாற்றிய திசர பெரேராவை சகலதுறை வீரராக அணிக்குள் தக்கவைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த சகலதுறை ஆட்டக்காரரான தனஞ்சய டி சில்வாவும் உபாதை காரணமாக ஒரு நாள் குழாமில் இடம்பெறவில்லை.
இதேவேளை, முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி எதிர்வரும் 13ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளதுடன், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் ஜிம்பாப்வேயையும், 19ஆம் திகதி பங்களாதேஷ் அணியையும் சந்திக்கவுள்ளது.
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம்
- அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்)
- உபுல் தரங்க
- தனுஷ்க குணதிலக
- குசல் மெண்டிஸ்
- தினேஷ் சந்திமால்
- குசல் ஜனித் பெரேரா
- திசர பெரேரா
- அசேல குணரத்ன
- நிரோஷன் டிக்வெல்ல
- சுரங்க லக்மால்
- நுவன் பிரதீப்
- துஷ்மன்த சமீர
- செஹான் மதுசங்க
- அகில தனஞ்சய
- லக்ஷான் சந்தகென்
- வனிது ஹசரங்க டி சில்வா