இந்தியாவுடனான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட வலுவான இலங்கை குழாம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-0 என முழுமையாக தோல்வியை சந்தித்ததோடு கடைசியாக தனது சொந்த மண்ணில் நடந்த ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி 3-2 என தோல்வியையே எதிர்கொண்டது.
இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அங்கம் வகித்த இடதுகை சுழல்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ முதல் முறையாக ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களான சாமர கபுகெதர, சகலதுறை ஆட்டக்காரர் மிலிந்த சிறிவர்தன மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சகலதுறை வீரர் திசர பெரேரா ஜிம்பாப்வே தொடரில் தமது இடத்தை இழந்த நிலையில் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
“கிரிக்கெட்டில் எவ்வளவு சிறந்த திறமையை வெளிக்காட்டும் நாடாக இருந்தாலும் ஒரு கடினமான நிலையை தாண்ட வேண்டிய சுழற்சி முறை அனைத்து நாடுகள், அணிகளுக்கும் ஏற்படக்கூடியதாகும். இலங்கை மூன்று வகை கிரிக்கெட்டிலும் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பாக செயற்படுகிறது. நாம் கடினமான நிலையை கடந்து வந்ததை மறந்துவிடக்கூடாது. வெள்ளை நிறப்பந்தில் இலங்கை எப்போதும் பலமாக உள்ளது. நாம் வலுவாக ஆட்டத்திற்கு திரும்பி இந்தியாவை வீழ்த்துவோம் என்று நான் உறுதியாக உள்ளேன். எம்மிடம் திறமை இருக்கிறது, திறன் இருக்கிறது. நாம் கடுமையாக உழைக்கிறோம், எமக்கு உற்சாகமும் உங்களது ஆதரவுமே தேவைப்படுகிறது” என்று இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் உபுல் தரங்க இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிவர்தன கடைசியாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆடியதோடு கபுகெதர சம்பியன்ஸ் தொடரில் பங்கேற்றபோது உபாதை காரணமாக பாதியில் விலகினார். கடந்த ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடந்த மறக்க முடியாத சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா அது தொடக்கம் நெட்வெஸ் T20 Blast தொடரில் க்ளோசஸ்டர்ஷெயர் அணிக்காக விளையாடினார்.
அசேல குணரத்ன, நுவன் பிரதீப், சுரங்க லக்மால் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் தமது உபாதைகள் காரணமாக அணித் தேர்வில் உள்ளடக்கப்படவில்லை. எனினும் ஜிம்பாப்வே தொடரில் விளையாடிய அனுபவ வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ இலங்கை குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஒருநாள் குழாம்
உபுல் தரங்க (தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், சாமர கபுகெதர, மிலிந்த சிறிவர்தன, மலிந்த புஷ்பகுமார, அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகன், திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, லசித் மாலிங்க, துஷ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ