இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய இரண்டு கிலோமீற்றர் ஓட்ட உடற்தகுதி பரிசோதனையில், வீரர்கள் தங்களுடைய உடற்தகுதியை நிரூபித்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான 36 வீரர்கள் கொண்ட முதற்தர குழாத்திலிருந்து, 32 வீரர்கள் நேற்றைய தினம் உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த உடற்தகுதி பரிசோதனை கொழும்பு சுகததாஸ விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட்டுடன் இணையும் ஷம்பக்க ராமநாயக்க
கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட யோ யோ (Yo yo) பரிசோதனைக்கு பதிலாக, புதிதாக விளையாட்டு வீரர்களுக்கு 2 கிலோமீற்றர் தூரத்தை 8.35 நிமிடங்களில் கடக்கவேண்டும் என்ற பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையை இலங்கை கிரிக்கெட் சபை நேற்றைய (12) தினம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இலங்கை கிரிக்கெட் அணியின் பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க, குசல் ஜனித் பெரேரா மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் உடற்தகுதியை நிரூபிக்க தவறியுள்ளதாக எமது இணையத்தளத்துக்கு அறியக்கிடைத்துள்ளது. இவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள தூரத்தை 2.35 நிமிடங்களில் கடக்க தவறியுள்ளனர்.
“நாம் முன்னோக்கி செல்கிறோம். உலகத் தரத்தின் அடிப்படையில் புள்ளிகளை பெற்றுக்கொள்ள நாம் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். துடுப்பாட்ட வீரர்கள், விக்கெட் காப்பாளர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு வித்தியாசமான இலக்குகளை கொடுத்திருந்தோம்” என இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்தகுதி முகாமையாளர் க்ராண்ட் லூடென் குறிப்பிட்டார்.
“வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்தால், மீண்டும் 40 நாட்களுக்கு பின்னர், உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்க முடியும். நாம் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத்துக்கு முன்னர் குறைந்தபட்ச உடற்தகுதி தரநிலையை அடையவேண்டும்” என இவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு, பெறப்பட்ட உடற்தகுதி பரிசோதனை முடிவுகள், கிரிக்கெட் சபையின் தேரவுக்குழுவிடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்காத வீரர்கள் மற்றும் அதற்கான காரணங்களையும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
- SLC Fitness test,குசல் மெண்டிஸ் – தனிப்பட்ட காரணம்
- தனன்ஜய டி சில்வா – தென்னாபிரிக்க தொடரில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
- அவிஷ்க பெர்னாண்டோ – முழங்கால் உபாதை
- லஹிரு திரிமான்ன – கொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<