மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

180

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கிரிக்கெட் பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்திருக்கின்றது. 

  கொரோனா வைரஸுக்கு மாற்று வீரரை அனுமதிக்க இங்கிலாந்து வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் இடம்பெற்ற அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டதோடு, அனைத்து நாட்டு வீரர்களது கிரிக்கெட் பயிற்சிகளும் தடைப்பட்டிருந்தன. எனினும், இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களும் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தயாராகுகின்றனர்.   

அதேநேரம், இலங்கையில் இந்த வைரஸ் தொற்று குறைந்திருக்கின்ற போதும் அது முழுமையாக குறையாத காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும் சுகாதார அறிவுறுத்தல்களை கடுமையான முறையில் பின்பற்றியே பயிற்சிகளைப் பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பயிற்சிகளை கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் (CCC) நடாத்த திட்டமிட்டிருப்பதோடு, பயிற்சிகளுக்காக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் 13 இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். 

இதேநேரம், பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களில் பெரும்பாலானோர் பந்துவீச்சாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் தயாராக அதிக நேரம் தேவை என்பதனாலேயே அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.  

இங்கிலாந்து செல்ல அனுமதி வழங்கிய மே.தீவுகள் கிரிக்கெட் சபை

இன்னும், தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் 12 நாட்கள் கொண்ட வதிவிட முகாமொன்றில் பங்கெடுத்தே கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் நிறைவடைந்த பின்னர் வீரர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்படாமல் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த வதிவிட முகாமிற்கான பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருடன் சேர்த்து நான்கு அங்கத்தவர்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.     

மறுமுனையில், கிரிக்கெட் விளையாட்டு கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயகரமான விளையாட்டுக்களில் ஒன்றாக இனம்காணப்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இலங்கை கிரிக்கெட் சபை, வீரர்களுக்கு வதிவிட முகாமொன்றின் மூலம் பயிற்சிகளை வழங்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை இலங்கையின் சுகாதார, விளையாட்டு அமைச்சுக்களுடன் இணைந்து இந்த வதிவிட முகாமின் முன்னரும், பின்னரும் இதில் பங்கெடுக்கும் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தினையும் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.  

இந்த நடவடிக்கைகளுக்கு அமைய பயிற்சி முகாமில் பங்கெடுக்கும் வீரர்கள் சொந்தக் காரணங்களுக்காக பயிற்சிகள் இடம்பெறும் நாட்களில் பயிற்சி இடம்பெறும் மைதானத்தினை விட்டு வெளியேறவோ, ஹோட்டல்களில் இருந்து வெளி இடங்களிற்குச் செல்லவோ தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. அதோடு, இந்த பயிற்சி முகாமில் பயன்படவிருக்கும் வாகனங்கள் அனைத்தும் அடிக்கடி தொற்றுநீக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

இவற்றுடன், பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள மைதானம், ஹோட்டல்கள் என்பன சுகாதார அதிகாரிகள் மூலம் ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டு அங்கே பயிற்சிகளுக்கு தேவையாக இருக்கும் அனைத்து விடயங்களும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது பயிற்சிகளை மீள ஆரம்பித்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியினர், ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிற்குப் பின்னர் அவர்கள் விளையாடும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும் என்ற போதும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<