இலங்கை தேசிய கால்பந்து அணியின் இறுதிக் குழாம் அறிவிப்பு

3143

இலங்கை தேசிய கால்பந்து அணி எதிர்வரும் காலங்களில் விளையாடவுள்ள சர்வதேசப் போட்டிகளுக்காக 24 வீரர்கள் அடங்கிய இறுதிக் குழாமை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.    

இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெற்ற தேசிய குழாமை அறிவிப்பதற்கான விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட இந்த குழாமில், டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்கள் அதிகம் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

புதுமுக வீரர்களுடன் இலங்கை தேசிய கால்பந்து அணி

இலங்கை தேசிய கால்பந்து…

தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாமில் ஏற்கனவே தேசிய அணியில் இடம்பெற்ற வீரர்களுடன் பல இளம் வீரர்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். இதில், இலங்கை கடற்படை விளையாட்டுக் கழக அணி வீரர் சுபாஷ் மதுசான் இம்முறை தேசிய அணியின் தலைவரான நியமிக்கப்பட்டுள்ளார் 

தேசிய அணிக்கான வீரர்களைத் தெரிவு செய்தவதற்கான தேர்வுகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து பாக வீரர்களையும் உள்ளடக்கும் விதத்தில் கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாட்டின் பல பாகங்களிலும் பல கட்டங்களாக இடம்பெற்றன.   

அதன் நிறைவில், தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சிகள் கடந்த சில மாதங்களாக தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரூமி பக்கீர் அலியின் தலைமையில் கொழும்பு பெத்தகான கால்பந்து பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றன. குறித்த பயிற்சிகளில் சிறந்த முறையில் செயற்பட்ட வீரர்களே தற்பொழுது இறுதிக் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர, பாடசாலை மாணவர்களான அசேல மதுஷான் (புனித ஜோசப் கல்லூரி) மற்றும் சபீர் ரசூனியா (புனித பேதுரு கல்லூரி) போன்ற இளம் வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலும், வட மாகாண வீரர்களான மரியதாஸ் நிதர்சன், ஜூட் சுபன் மற்றும் டக்சன் பியுஸ்லஸ் ஆகியோரும், கிழக்கு மாகாணத்தின் மொஹமட் முஸ்தாக்கும் தேசிய குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.  

சாப் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் மோதவுள்ள இலங்கை

இலங்கை அணிக்கு கடந்த காலங்களில் தலைவராக செயற்பட்டவரும், மாலைத்தீவுகளின் முன்னணி கழகமான ஈகல்ஸ் அணியின் கோல் காப்பாளருமான சுஜான் பெரேராவும் இக்குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். அவரே, அணியின் பிரதான கோல் காப்பாளராக செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

இலங்கை தேசிய அணி பல வருடங்களின் பின்னர் பங்கு கொள்ளும் முதலாவது சர்வதேசப் போட்டியாக இம்மாதம் 8ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இடம்பெறவுள்ள லிதுவேனியா அணியுடனான நட்பு ரீதியிலான போட்டி அமையவுள்ளது.

குறித்த தொடரை அடுத்து ஜப்பான் பயணிக்கவுள்ள இலங்கை அணி அங்கு பயிற்சிப் போட்டிகளில் ஆடவுள்ளது. இவ்வருடம் செப்டம்பர் மாதம் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) சுசுகி கிண்ண தொடருக்கான பயிற்சி ஆட்டங்களாகவே குறித்த போட்டிகள் அனைத்தும் அமையவுள்ளன.    

இலங்கை குழாம்

  • முன்கள வீரர்கள்

சபீர் ரசூனியா (பொலிஸ் வி.க)
சஜித் குமார (இராணுவப்படை வி.க)
பசால் மொஹமட் (கொழும்பு கா.க)
சர்வான் ஜோஹர் (கொழும்பு கா.க)
அசேல மதுஷான் (ரினௌன் வி.க)

  • மத்தியகள வீரர்கள்

மரியதாஸ் நிதர்சன் (ரினௌன் வி.க)
அபீல் மொஹமட் (கொழும்பு கா.க)
மொஹமட் ரிப்னாஸ் (கொழும்பு கா.க)
ஷதுர லக்ஷான் (நியு யங்ஸ் கா.க)
மொஹமட் ஹஸ்மீர் (கடற்படை வி.க)
மொஹமட் முஸ்தாக் (கிறிஸ்டல் பெலஸ் கா.க)
சசன்க ஜயசேகர (ரட்னடம் வி.க)

  • பின்கள வீரர்கள்

ஷரித்த ரத்னாயக்க (கொழும்பு கா.க)
ஜூட் சுபன் (ரினௌன் வி.க)
அசிகுர் ரஹ்மான் (இராணுவப்படை வி.க)
உதய கீர்த்தி (இராணுவப்படை வி.க)
சுபாஷ் மதுசான் (கடற்படை வி.க) – அணித் தலைவர்
டக்சன் பியுஸ்லஸ் (நியு யங்ஸ் கா.க)
சமித் சுபாசன (இராணுவப்படை வி.க)

  • கோல் காப்பாளர்கள்

கவீஷ் பெர்னாண்டோ (கொழும்பு கா.க)
தனுஷ்க ராஜபக்ஷ (நியு யங்ஸ் கா.க)
ராசிக் ரிஷாட் (ரினௌன் வி.க)
சுஜான் பெரேரா (ஈகல்ஸ் விளையாட்டுக் கழகம், மாலைத்தீவுகள்)

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க