தென்னாபிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியின் காரணமாக காயப்பட்ட நிலையில், நேற்று கேப்டவுன் நியூலென்டியில் ஆரம்பமான அவ்வணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடி வருகின்றது.

ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றியைத் தவறவிட்ட இலங்கை அணிக்கு தொடரை வெற்றி கொள்ள அல்லது சமப்படுத்த இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த மைதானத்தில் இதற்கு முன்னதாக தென்னாபிரிக்கா அணி 14 போட்டிகளில் விளையாடி, ஒரே ஒரு போட்டியில் மாத்திரமே தோல்வியுற்றிருக்கிறது. அதேபோன்று, இதுவரை இந்த மைதானத்தில் மூன்று போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை அணி, அவை அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.

அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக முன்னணி டெஸ்ட் அணியாக திகழும் தென்னாபிரிக்காவுடன் இறுதியாக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின்போது, இலங்கை அணி நான்கு நாட்களுக்குள் 10 விக்கெட்டுக்களால் தோல்வியை தழுவியமையும் நினைவுகூறத்தக்கது.

இலங்கை அணி

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடிய விதம் பல அம்சங்களில் ஏமாற்றம் அளித்திருந்தாலும், அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார். குறித்த போட்டியில், துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டமே தோல்விக்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி சார்பாக தற்பொழுது விளையாடும் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமல் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரே குறித்த மைதானத்தில் இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

அஞ்செலோ மெதிவ்ஸ் இரண்டு போட்டிகளில் 32.00 என்ற ஓட்ட சராசரியுடன் மொத்தமாக 64 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதேநேரம், தினேஷ் சந்திமல் வெறும் 36 ஓட்டங்களுடன் 18 என்ற சராசரியைக் கொண்டுள்ளார்.

பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 108 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரமே வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், ஏனைய வீரர்கள் அனைவரும் இந்த கிரிக்கெட் மைதானத்தில் முதன் முதலாக விளையாடுகின்றனர்.

இதற்கு முன்னதாக துடுப்பாட்டத்தில், இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்வன் அத்தபத்து இரண்டு போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் 149 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதேபோன்று, சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இரண்டு போட்டிகளில் பங்குபற்றி 342 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமையே சாதனையாக உள்ளது.

எனவே, தற்போதைய வீரர்களின் மைதான அனுபவம் மற்றும் வீரர்களின் திறமை வெளிப்பாடு என்பவற்றைப் பார்க்கும்பொழுது இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு பாரிய சவால் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணி

தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்களின் புள்ளி விபரங்கள் சொந்த மண்ணில் உயர்ந்த நிலையிலேயே காணப்படுகின்றன. ஹசிம் அம்லா 16 போட்டிகளில் 1,215 ஓட்டங்களுடன் 50.62 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். அணித்தலைவர் டுப்லெசிஸ் 42.50 என்ற சராசரியுடன் அம்லாவுக்கு அடுத்த இடத்திலும், நடுத்தர துடுப்பாட்ட வீரர் டீன் எல்கர் 31.16 என்ற சாராசரியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

பந்து வீச்சை பொறுத்த மட்டில் கடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வெர்னன் பிலேண்டர் 31 விக்கெட்டுக்களுடன் 20க்கும் குறைந்த சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார். இவரை தவிர்ந்த ஏனைய தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களான ககிஸ்கோ றபாடா மற்றும் கைல் அப்போட் ஆகியோர் இதற்கு முன்னதாக இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகளில் விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லை. எனினும், அவர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்துவதில் 24க்கும் குறைவான சராசரியையே கொண்டுள்ளமை முக்கிய விடயமாகும்.

இறுதியாக….

இம்முறை அனுபவம் குறைந்த அதிகமான இளம் வீரர்களை கொண்டுள்ள இலங்கை அணி, அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் பட்சத்தில் தென்னாபிரிக்காவில் இதற்கு முன்னர் இலங்கை அணி நிலைநாட்டியுள்ள கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பாரிய மாற்றம் ஏற்படும்.