வளர்ந்து வரும் ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Emerging Teams Asia Cup 2024

80
Emerging Teams Asia Cup 2024

ஓமானில் நடைபெறவுள்ள வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை A குழாம் உத்தியோகபூர்வமாக இன்று (13) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் (ACC) ஏற்பாடு செய்துள்ள வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ஆடவர்) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம் மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை ஓமானில் நடைபெறவுள்ளது.

6ஆவது தடவையாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரானது முதல் தடவையாக T20 போட்டிகள் வடிவில் நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஓமான் கிரிக்கெட் அகடமி மைதானத்தில் நடைபெறும்.

இம்முறைக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளின் A அணிகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), ஓமான் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்த நிலையில், இம்முறை வளர்ந்து வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் களமிறங்கவுள்ள இலங்கை A குழாம் இன்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவராக உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக பிரகாசித்து வருகின்ற முன்னணி வீரர்களில் ஒருவரான லஹிரு உதார நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தேசிய அணியில் விளையாடியுள்ள ரமேஷ் மெண்டிஸ், நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் சஹன் ஆராச்சிகே ஆகியோர் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

தேசிய அணி வீரர்களை தவிர்த்து உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக பிரகாசித்து வருகின்ற பவன் ரத்நாயக்க, யசோதா லங்கா, லசித் க்ரூஸ்புள்ளே, எஷான் மாலிங்க, தினுர கலுபஹன, நிபுன் ரன்ஷிக, இசித விஜேசுந்தர, அஹான் விக்ரமசிங்க ஆகிய வீரர்களும் இலங்கை A அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இம்முறை வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை A அணி தனது முதல் ஆப்கானிஸ்தான் A அணியை எதிர்வரும் 18ஆம் திகதி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை A குழாம் விபரம்

லஹிரு உதார (தலைவர்), யசோதா லங்கா, லசித் க்ரூஸ்புள்ளே, நுவனிந்து பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, பவன் ரத்நாயக்க, எஷான் மாலிங்க, தினுர கலுபஹன, நிபுன் ரன்ஷிக, இசித விஜேசுந்தர, அஹான் விக்ரமசிங்க, கவிந்து நதீஷான், நிமேஷ் விமுக்தி, துஷான் ஹேமன்த, ரமேஷ் மெண்டிஸ்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<