போர்னியோ 7s ரக்பி போட்டிகளில், தாம்விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. எனினும் பயிற்றுவிப்பாளரான பீட்டர் வுட்ஸின் கீழ் விளையாடும் இலங்கை அணியானது காலிறுதியில் ஹொங்கொங் அணியை சந்திக்கும் முன்னர் தம்மை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அணிக்கு 7 பேர் கொண்ட உலக கிண்ண தெரிவு போட்டியில் விளையாடும் நோக்கில் பயிற்சி பெற்ற ஹொங்கொங் அணியானது, அதற்கு பயிற்சி பெரும் முகமாக இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றது. இலங்கை அணியானது சமீப காலமாக ஹொங்கொங் அணியை வெல்ல முடியாமல் தவிக்கிறது. இன்னும் 3 வாரத்தில் நடைபெற இருக்கும் அணிக்கு 7 பேர் கொண்ட உலக கிண்ண தெரிவு போட்டியில் பங்குபெற இருக்கும் இரு அணிகளுக்கும் தமது திறமைகளை வெளிக்காட்ட இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் ஆகும்.
முதல் நாள் முடிவின் பொழுது ரீசா ரபாய்தீன், ஸ்ரீநாத் சூரியபண்டார, கெவின் டிக்சன் மற்றும் தலைவர் தனுஷ்க ரஞ்சன் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். உயர வந்த பந்துகளை பெற்றுக்கொள்வதில் தனுஷ் தயான் சிறப்பாக செயற்பட்டார். சுதர்ஷன முதுதந்திரியும் தனது திறமையால் சில ட்ரைகளை வைத்தார். கவிந்து பெரேரா மற்றும் ரிச்சர்ட் தர்மபால ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும், ஒரு அணியாக விளையாடத் தவறினர். இலங்கை அணியானது தமது 22 மீட்டர் எல்லையினுள் ட்ரைப் 7s மற்றும் போர்னியோ ஈகிள்ஸ் அணிகளை தடுத்து நிறுத்த தவறினர்.
இலங்கை மகளிர் அணியானது காலிறுதி போட்டியில் மலேசிய அணியை சந்திக்கவுள்ளது.
இலங்கை எதிர் நியூசிலாந்து போர்னியோ ஈகிள்ஸ் (12 – 35)
இலங்கை அணி இரண்டாவது முறையாக போர்னியோ ஈகிள்ஸ் அணியிடம் தோல்வியுற்றது. இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று இருக்கலாம். எனினும் இலங்கை அணியானது உத்வேகத்துடன் விளையாட தவறியது. கவிந்து பெரேரா மற்றும் சுதர்ஷன முதுதந்திரி மட்டுமே ட்ரை வைத்தனர்.
இலங்கை அணியானது சிறப்பாக விளையாடி தாய்லாந்து மகளிர் அணியை 26-05 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றனர். முன்னர் இலங்கை மகளிர் அணியானது 7s போட்டிகளில் தடுமாறிய பொழுதும், இம் முறை பயிற்றுவிப்பாளர் சுதத் சம்பத்தின் கீழ் சிறப்பாக செயற்படுகின்றது. எனவே இம்முறை மகளிர் அணியானது போட்டிகளில் எவ்வளவு தூரம் செல்லும் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.