இந்தியாவுடனான தொடரில் தமது பந்துவீச்சுப் பாணியை மாற்றவுள்ள இலங்கை

1332

உஷ்ணமான காலநிலையைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை ஐந்து பந்து வீச்சாளர்களை தமது குழாமில் உள்ளடக்கியிருந்தது. எனினும், இந்திய அணியுடன் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை நான்கு பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியாகவே எதிர்பார்க்க முடியும் என அணித்தலைவரான தினேஷ் சந்திமால் கூறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

“பாகிஸ்தானுக்கு எதிராக, நாம் ஆறு துடுப்பாட்ட வீரர்களுடனும் ஐந்து பந்து வீச்சாளர்களுடனும் விளையாடியிருந்தோம். அது உஷ்ணமான காலநிலையில் எமக்கு மிகவும் உதவியாக (ஐக்கிய அரபு இராச்சியத்தில்) அமைந்திருந்தது. எனினும், நான்கு பந்துவீச்சாளர்களுடன் போட்டியொன்றில் வெல்வது இலகுவான  விடயமாக அமையாது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிகவும் நல்ல சில பந்துவீச்சாளர்களை அவ்வணி கொண்டுள்ளது, எனவே நாங்கள் சகலதுறை வீரர்களை மையமாகக் கொண்டு போட்டிக்கு தகுதியான அணியை தேர்வு செய்ய வேண்டியுள்ளோம். போட்டிக்கான மைதானத்தை பார்த்த பின்னர் நாம் எமது திட்டங்களை வகுக்கவுள்ளோம்“ என சந்திமால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவுடனான அண்மைய தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் (9-0 என) சொந்த மண்ணில் வைத்து தோல்வியடைந்த இலங்கை அணி, அயல்நாடு ஒன்றில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய போதிலும் ஒரு நாள் தொடரை 5-0 என பறிகொடுத்திருந்தது.

“எம் எல்லோருக்கும் இந்தியா (டெஸ்ட்) தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரியும். அத்தோடு கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் முன்னேற்றகரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றனர். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தோம். ஒரு அணியாகவும் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். இந்தியாவுடனான இத்தொடரை எமது வீரர்கள் ஒரு சவாலாக எடுத்து அதில் நல்ல முடிவுகளைத் தருவார்கள் என உறுதியாக நம்புகின்றேன்“ என்று சந்திமால் கூறியிருந்தார்.

அத்தோடு இந்தியாவுடன் விளையாடுவது மிகவும் கடினமான விடயம் என்பதையும் ஒப்புக் கொண்ட சந்திமால், இலங்கையின் கடந்த கால முடிவுகளால் மனம் தளரப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

“இது எமக்கு மிகவும் சவாலான ஒரு தொடராக அமையவுள்ளது. எனினும் இங்கிருக்கும் பார்வையாளர்களினால், நாம் இங்கே விளையாட மிகவும் விரும்புகின்றோம். நான் எமது கடந்த காலத்தை பின்னோக்கி பார்க்க விரும்பவில்லை. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக (டெஸ்ட்) தொடரில் சிறந்த பதிவைக் காட்டியிருந்தோம். தற்போது எமது வீரர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான உரிய தரத்தில் காணப்படுகின்றனர். எனவே இனி நாம்  வருகின்ற இந்த சவாலை முகம் கொடுக்கத் தயராகுவோம்“ என சந்திமால் கூறியிருந்தார்.

சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷை விட்டு இலங்கை அணிக்கு வருவாரா?

இந்திய அணியின் நட்சத்திர சுழல் வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரையும் எதிர்கொள்வதற்கான உத்திகளையும் திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்த சந்திமால் அவற்றை தற்போது அறியத்தரப்போவதில்லை எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

“ஒரு அணியாக நாம் சில திட்டங்களை எங்களுக்குள்ளேயே பேசி வைத்துள்ளோம். அதனை மைதானத்தில் மாத்திரமே நாங்கள் செயற்படுத்த வேண்டும் அப்போதே  அவற்றின் துணையோடு இந்தியாவுடன் போட்டியை வெற்றி கொள்ள முடியும்“  என டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்ட பின்னர் சந்திமால் பேசியிருந்தார்.

1982ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அந்நாட்டு மண்ணில் ஒரு போட்டியில் கூட இதுவரையில் வெற்றி பெறவில்லை. இதனை மாற்றுவதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக சந்திமால் மேலும் தெரிவித்திருந்தார்.

“இந்திய மண்ணில் இதுவரையில் நாம் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எங்கள் அனைவருக்கும் அது ஒரு கனவாக காணப்படுகின்றது. இதுவே நாம் கொல்கத்தாவில் விளையாடும் முதல் போட்டியும் கூட. கொல்கத்தா ரசிகர்களின் முன்னாள் விளையாடுவது எமக்கு மகிழ்ச்சியான விடயமே. ஒரு அணியாக நாம் நல்ல முறையில் ஆரம்பித்து அதனை அப்படியே தொடர வேண்டும்“

“இந்தியாவில் எனக்கு இதுவே முதல் (டெஸ்ட்) தொடர். இன்னும் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரைத் தவிர ஏனைய அனைத்து வீரர்களுக்கும் இந்தியாவில் முதல் தொடர் இது என்பதால், ஒவ்வொருவருக்கும் இது நல்ல சவாலாகவே அமையும்.”

ஊடகவியலாளர்கள் எப்படி நீங்கள் அஷ்வின், ஜடேஜா போன்றோரை எதிர்கொள்ளப்போகின்றீர்கள் எனக் கேட்டதற்கு சந்திமால் இவ்வாறு பதிலளித்தார், அவர்கள் இருவரும் டெஸ்ட் தரவரிசைப்பந்து வீச்சாளர்களில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாகவும் அவர்களது பந்துவீச்சு சிறப்பாக இருக்கின்றது. எங்கள் திட்டங்களை நாங்கள் உங்கள் முன் கூறவிரும்பவில்லை“

“இந்தியாவுடனான போட்டித் தொடரில் வெற்றிகொள்வதற்கு சில திட்டங்களை எங்களுக்குள் இரகசியமாக வைத்துள்ளோம். நாம் இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு எதிராக என்ன திட்டங்களை பயன்படுத்தப் போகின்றோம் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.“