SAG 2019 கால்பந்து: மாலைத்தீவை சமன் செய்தது இலங்கை 

192

தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) இலங்கை கால்பந்து அணி, தாம் பங்கு கொண்ட மாலைத்தீவு அணியுடனான முதலாவது போட்டியை கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் நிறைவு செய்துள்ளது.

நேபாளத்தில் இடம்பெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று (02), கால்பந்து ஆட்டமும் ஆரம்பமாகியது. கத்மண்டு டசரத் அரங்கில் இடம்பெற்ற முதல் மோதலில் இலங்கை – மாலைத்தீவு அணிகள் மோதின.

SAG போட்டிகளுக்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு

நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் வரும் டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி…

23 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான இந்த போட்டியில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான சுஜான் பெரேரா, மொஹமட் பசால் மற்றும் டக்சன் பியுஸ்லஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். உலகக் கிண்ண தகுதிகாண் மோதலில் இலங்கை அணியில் இடம்பெற்ற 9 வீரர்களுக்கு மேலதிகமாக ஜோய் நிதர்சன் மற்றும் மொஹமட் சஹீல் ஆகியோர் இன்றைய முதல் பதினொருவர் அணியில் விளையாடினர்.

போட்டி ஆரம்பித்தது முதல் மாலைத்தீவு அணி பந்தை தமக்குள் கட்டுப்படுத்தி வைத்து விளையாடியது. இலங்கை வீரர்கள் நீண்ட உதை மூலம் கோலுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முற்பட்ட போதும், மாலைத்தீவு வீரர்கள் அந்த முயற்சிகளை இலகுவாக தடுத்து ஆடினர்.

போட்டியின் முதல் பாதியில் உபாதைக்குள்ளான அமான் பைசர், சுந்தரராஜ் நிரேஷ் மூலம் மாற்றப்பட்டார்.

எனினும், நிரேஷ் மேற்கொண்ட முறையற்ற ஆட்டம் காரணமாக அவருக்கு போட்டியின் முதல் பாதியிலேயே மஞ்சள் அட்டை காட்டப்பட்டு, மாலைத்தீவுகள் அணிக்கு ப்ரீ கிக் வழங்கப்பட்டது. இதன்போது கிடைத்த கோலுக்கான வாய்ப்பை அக்ரம் கானீ கம்பங்களுக்கு மேலால் செலுத்தினார்.

முதல் பாதி: மாலைத்தீவு 0 – 0 இலங்கை

இரண்டாம் பாதி ஆரம்பமாகியது முதல் இலங்கை வீரர்கள் மிக வேகமாக பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டாலும், எதிரணி கோலுக்கான முயற்சிகளை ஏற்படுத்தியது. இதன்போது பல வாய்ப்புக்களை, இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா சிறப்பாக முறியடித்தார்.

57 ஆவது நிமிடத்தில் மாலைத்தீவு அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின் போது அக்ரம் கானீ செலுத்திய பந்து கோல் கம்பத்தில் பட்டு திசை மாறியது.

போட்டியில் 75 நிமிடங்கள் கடந்த நிலையில், மாலைத்தீவு வீரர்களிடையே இடம்பெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின்னர், ஹம்சா மொஹமட் மேற்கொண்ட கோலுக்கான முயற்சியையும் சுஜான் சிறந்த முறையில் தடுத்தார்.

அடுத்த 3 நிமிடங்களில், ஏற்கனவே மஞ்சள் அட்டை பெற்றிருந்த நிரேஷ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவ, 10 வீரர்களுடன் விளையாடிய இலங்கை அணிக்கு எதிராக மாலைத்தீவு அணியின் இறுதி 10 நிமிட ஆட்டம்  மிக வேகமாக இருந்தது.

போட்டியின் இறுதி நிமிடங்களில் மாலைத்தீவு வீரர்களுக்கு கிடைத்த இலகு வாய்ப்புக்கள் சிறந்த முறையில் நிறைவு செய்யப்படவில்லை.

தெற்காசிய விளையாட்டு விழா – கால்பந்து அட்டவணை வெளியீடு

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு…

குறிப்பாக, வழமைபோன்று எதிரணியின் வெற்றி வாய்ப்புக்களை தடுக்கும் முக்கிய வீரராக இலங்கை அணியின் கோல் காப்பாளர் சுஜான் பெரேரா இருந்தார்.

இறுதி வரை கோல்கள் இன்றி நிறைவுற்ற இந்த போட்டியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டன.

இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் நேபாள அணியை எதிர்வரும் புதன்கிழமை (04) எதிர்கொள்ளவுள்ளது.

முழு நேரம்: மாலைத்தீவு 0 – 0 இலங்கை

மஞ்சள் அட்டை

இலங்கை – சுந்தரராஜ் நிரேஷ் 40’ & 79’

மாலைத்தீவு – நயிஸ் ஹசன் 82’

சிவப்பு அட்டை

இலங்கை – சுந்தரராஜ் நிரேஷ் 79’

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க