ஆசிய வலைப்பந்தாட்ட அரையிறுதிக்கு தகுதிபெற்ற இலங்கை அணி

Asian Netball Championship 2024

72

இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்றுவரும் 13வது ஆசிய வலைபந்து சம்பியன்ஷிப் தொடரில் முன்னாள் சம்பியன் மலேசியாவுடன் நேற்று (23) நடைபெற்ற போட்டியில் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியுடன் தோல்வியுறாத அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுக் கொண்டது.  

இந்தியாவின் பெங்களூரு கோரமங்கலம் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற A குழுவுக்கான போட்டியொன்றில் நடப்புச் சம்பியனான இலங்கை அணி. முன்னாள் சம்பியனும், இம்முறை போட்டித் தொடரில் பிரபல அணியுமான மலேசியாவை எதிர்கொண்டது 

இந்தப் போட்டியின் முதலாவது காலிறுதியை 18 – 11 எனவும், இரண்டாவது காலிறுதியை 22 – 11 என தனதாக்கிக்கொண்ட இலங்கை அணி, இடைவேளையின்போது 40 – 22 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. 

இடைவேளையினை அடுத்து நடைபெற்ற 3ஆவது காலிறுதியில் மலேசியா அணி பலத்த போட்டியைக் கொடுத்திருந்தது. எனினும், இலங்கை வீராங்கனைகளின் அபார ஆட்டத்தால் அப் பகுதியை 16 – 13 புள்ளிகள் வித்தியாசத்தில் னதாக்கிக்கொண்ட இலங்கை அணி, கடைசியும், 4ஆவது காலிறுதியை 16 – 5 என தனதாக்கிக்கொண்டது. 

இதன் பிரகாரம் ஒட்டுமொத்த நிலையில் 72 – 40 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியீட்டியது. ஆசிய தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள மலேசியா, 1985 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் சம்பியனாகத் தெரிவாகியது 

இதேவேளை, இக் குழுவில் இடம்பெறும் பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளை இலகுவாக வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

இலங்கை அணி பங்கேற்கும் முதல் சுற்றின் கடைசிப் போட்டி 26ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு மாலைதீவுகள் அணியுடன் நடைபெறவுள்ளது. 

>>மேலும்பலவிளையாட்டுசெய்திகளைபடிக்க<<