ஒலிம்பிக், AFC தகுதிகாண் கால்பந்து தொடர் வாய்ப்பை இழக்கும் இலங்கை 

428

இலங்கை கால்பந்து சம்மேளனம் தற்போது தடையினைப் பெற்றிருப்பதன் காரணமாக ஆசியப் பிராந்தியத்திற்கான 2024ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் தகுதிகாண் தொடர் மற்றும் கட்டாரில் இடம்பெறும் 2024ஆம் ஆண்டு ஆசியக் கால்பந்து சம்மேளனத்தின் (AFC) 23 வயதின் கீழ்ப்பட்ட ஆசியக் கிண்ண கால்பந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் தொடர் என்பவற்றில் பங்கேற்கும் வாய்ப்பினை இழக்கின்ற அபாய நிலையொன்றுக்கு இலங்கை முகம் கொடுத்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

>>வாக்குரிமை கோரும் இலங்கையின் முன்னணி கால்பந்து கழகங்கள்

சர்வதேச கால்பந்து சம்ளேனம் (FIFA) இந்த விடயத்தினை கடிதம் ஒன்று வாயிலாக இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு தெரியப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த கடிதத்தில் மேலே குறிப்பிடப்பட்ட தொடர்களுக்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 13ஆம் திகதியினை நுழைவுத் திகதியாக அறிவித்திருந்த நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனம் தமது நுழைவை (Entry) மே மாதம் 10ஆம் திகதியே உறுதி செய்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பிட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களின் அடிப்படையில், இலங்கை இந்த ஆண்டின் ஜனவரி மாதம் 21ஆம் திகதி தொடக்கம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தடைக்கு உள்ளாகியிருப்பதன் காரணமாக ஆசியப் பிராந்தியத்திற்கான 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தகுதிகாண் தொடர் மற்றும் கட்டாரில் நடைபெறும் 2024ஆம் ஆண்டு ஆசியக் கால்பந்து சம்மேளனத்தின் (AFC) 23 வயதின் கீழ்ப்பட்ட ஆசியக் கிண்ண கால்பந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் தொடர் என்பவற்றில் பங்கெடுக்கும் தகுதியினை தற்போது இழந்த நிலையில் காணப்படுகின்றது.

>>இலங்கை கால்பந்தில் ஊழல், மோசடிகள் குவிந்துள்ளன – அமைச்சர்

அத்தோடு குறித்த தொடர்களுக்கான அணிகள் நிரல்படுத்தல் (Team’s Draw) நிகழ்வானது மே மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடருக்கு இரு வாரங்கள் முன்னர் அதாவது மே மாதம் 11ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடை நீக்கப்படாது போயின், இலங்கையின் கால்பந்து அணிகள் குறிப்பிட்ட தொடர்களில் பங்கெடுக்கும் வாய்ப்பினை முழுமையாக இழக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே இலங்கை கால்பந்து சம்மேளனம் குறிப்பிட்ட தொடர்களில் பங்கேற்க தம்மீது இருக்கும் தடையை விரைவில் நீக்கி கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<