வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட Road Safety World Series T20 தொடரில் இன்று (18) தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணியை எதிர்கொண்ட இலங்கை லெஜன்ட்ஸ் 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, தொடரில் மூன்றாவது தொடர் வெற்றியினையும் பதிவு செய்துள்ளது.
T20 உலகக் கிண்ணத்தில் ஆடும் UAE அணி அறிவிப்பு
இரு அணிகளும் மோதிய போட்டி கான்பூரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க வீரர்கள் முதலில் இலங்கை லெஜென்ட்ஸ் அணியை துடுப்பாடப் பணித்தனர்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை லெஜென்ட்ஸ் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை லெஜன்ட்ஸ் அணி துடுப்பாட்டம் சார்பில் ஜீவன் மெண்டிஸ் அதிகபட்சமாக 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்கள் பெற, உபுல் தரங்க 7 பௌண்டரிகள் உடன் 36 ஓட்டங்கள் எடுத்தார்.
தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் பந்துவீச்சு சார்பில் கார்னட் கிரகர் 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஜோஹான் போத்தா மற்றும் வெர்னன் பிலாந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 166 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
சனத் ஜயசூரியவின் அதிரடி பந்துவீச்சுடன் இலங்கை லெஜன்ட்ஸ் வெற்றி
தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணி துடுப்பாட்டம் சார்பில் மோர்னே வான் வைக் 56 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் எடுக்க, நுவான் குலசேகர 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.
போட்டியின் ஆட்ட நாயகன் விருது இலங்கை லெஜன்ட்ஸ் வீரர் ஜீவன் மெண்டிஸிற்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை லெஜன்ட்ஸ் – 165/6 (20) ஜீவன் மெண்டிஸ் 43(27)*, உபுல் தரங்க 36(27), கார்னட் கிரகர் 43/2(4)
தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் – 154/6 (20) மோர்னே வைன் வைக் 76(56), நுவன் குலசேகர 33/2 (4)
முடிவு – இலங்கை லெஜன்ட்ஸ் 11 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<