வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறவுள்ள, வீதி பாதுகாப்பு T20 உலகத்தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை லெஜன்ட்ஸ் அணி இன்று (01) காலை இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளது.
விசேட விமானமொன்றில் இந்தியா நோக்கி புறப்பட்ட இலங்கை லெஜன்ட்ஸ் அணியில், இறுதிநேரத்தில் மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சாமர கபுகெதர தொடரிலிருந்து விலகுவதாக இறுதி தருணத்தில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி நிர்வாகத்திடம் அறிவித்துள்ளார்.
>> இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் விளையாடவுள்ள உபுல் தரங்க
தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து சாமர கபுகெதர விலகியுள்ளதாக அணியின் முகாமையாளர் ஷியாம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “சாமர கபுகதெர தனிப்பட்ட காரணங்களுக்காக துரதிஷ்டவசமாக அணியில் இணையவில்லை. அவர், இந்தியா சென்று, மீண்டும் தனது தேவைக்காக இலங்கைக்கு சரியான நேரத்தில் வந்தடைய முடியாது என்ற காரணத்தால், இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். நாம் விரைவில் அவருக்கான மாற்று வீரரை அறிவிப்போம்” என இவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் ஏனைய வீரர்கள், இன்றைய தினம் புறப்பட்டுள்ளனர். இந்த தொடரில் சனத் ஜயசூரிய, ரசல் ஆர்னல்ட், அஜந்த மெண்டிஸ், ரங்கன ஹேரத், உபுல் தரங்க மற்றும் நுவான் குலசேகர உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை லெஜன்ட்ஸ் குழாத்தின் தலைவராக திலகரட்ன டில்ஷான் செயற்படவுள்ள நிலையில், அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக இந்தியா வருகைத்தந்து அணியுடன் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா புறப்பட்டுள்ள இலங்கை லெஜன்ட்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணியை எதிர்வரும் 6ம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<