வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர், அடுத்தமாதம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கி கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரின் நான்கு போட்டிகள் மாத்திரமே நடைபெற்றிருந்த நிலையில், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
>>ஜனவரி மாதத்துக்கான ICC இன் சிறந்த வீரரானார் ரிஷாப் பண்ட்
இந்தநிலையில், தொடரின் எஞ்சிய போட்டிகளை, இந்தியாவின் ராஜ்பூரில் 65,000 ரசிகர்கள் பார்வையிடும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் மிகச்சிறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன், ப்ரட் லீ, ப்ரைன் லாரா, திலகரட்ன டில்ஷான் மற்றும் வீரேந்திர செவாக் ஆகியோருடன் பல முன்னணி வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
முன்னாள் வீரர்களின் பங்கேற்புடன் T20 போட்டிகளாக நடத்தப்படும் இந்த தொடரானது, நாட்டின் வீதி பாதுகாப்பை வலியுறுத்தும் முகமாக நடத்தப்படுகிறது.
இந்த கிரிக்கெட் தொடருக்கு செல்லும் இலங்கை லெஜன்ட்ஸ் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் கருத்து வெளியிடுகையில்,
“நாம் இம்மாதம் 27ஆம் திகதி இந்தியா புறப்படவுள்ளதுடன், மார்ச் 3ஆம் திகதி முதல் போட்டியில் விளையாடவுள்ளோம். போட்டி, கடந்த வருடம் நிறுத்தப்பட்ட நிலையிலிருந்து தொடரவுள்ளதுடன், பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணி தொடரில் பங்கேற்காது. எனினும், பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
குறித்த இந்த வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், மார்ச் 21ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது” என இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் முகாமையாளர் ஷியாம் குறிப்பிட்டார்.
அத்துடன், ஆரம்பமாகவுள்ள இந்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் புதிய வீரர்கள் பலர் இணைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<