வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் நடைபெறவுள்ள 2ஆவது வீதிப் பாதுகாப்பு உலக T20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மஹாராஷ்டிரா வீதிப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றுகின்ற வீதிப் பாதுகாப்பு உலக T20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது அத்தியாயம் இந்த மாதம் 10ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை கான்பூர், ராஜ்பூர், இந்தூர் மற்றும் டேராடூன் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
22 நாட்கள் நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், இங்கலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 8 லெஜண்ட்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் ஆரம்பமாகவுள்ள வீதிப் பாதுகாப்பு உலக T20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று (05) உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
>> லெஜெண்ட்ஸ் T20 தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிப்பு
இதன்படி, செப்டம்பர் 10ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் இந்திய லெஜண்ட்ஸ் அணி மற்றும் தென்னாபிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதனிடையே, இலங்கை லெஜண்ட்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் அவுஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொள்வதுடன், தொடர்ந்து இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு வீதிப் பாதுகாப்பு உலக T20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி செப்டம்பர் 28ஆம் திகதியும், 2ஆவது அரை இறுதிப் போட்டி செப்டம்பர் 29ஆம் திகதியும், இறுதிப் போட்டி ஒக்டோபர் முதலாம் திகதியும் ராய்பூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் போட்டி அட்டவணை
- செப்டம்பர் 11 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா – கான்பூர்
- செப்டம்பர 13 – இலங்கை எதிர் இங்கிலாந்து – கான்பூர்
- செப்டம்பர 17 – இலங்கை எதிர் தென்னாப்பிரிக்கா – இந்தூர்
- செப்டம்பர 25 – இலங்கை எதிர் நியூசிலாந்து – டேராடூன்
- செப்டம்பர 27 – இலங்கை எதிர் பங்களாதேஷ் – ராய்பூர்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<