காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை கனிஷ்ட ரக்பி அணி வீரர்கள்

262
Junior tuskers hit with high fever; Isuru Udayanga flown in as replacement

தற்பொழுது மலேசியாவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய ரக்பி கிண்ண தொடரில் பங்கு கொள்வதற்கு சென்றுள்ள இலங்கை ரக்பி அணி வீரர்கள் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் ஹென்ரி டெர்ரென்ஸ் உட்பட மேலும் இருவருக்கும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சாலிந்ர அலககோன் (திரித்துவக் கல்லூரி, இல 08), அதீஷ வீரதுங்க (இசிபதன கல்லூரி, ப்ளான்கர் நிலை வீரர்) மற்றும் உதய சுபுன் (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி) ஆகியோரே கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகி, வாந்தி எடுத்ததன் காரணத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை ஹொங்கொங் அணியுடன் இடம்பெற்ற போட்டிக்கான ஆரம்ப வீரர்களில் சாலிந்ர உள்வாங்கப்பட்டிருந்தார்.  எனினும், குறித்த போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவர் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்தமையினால், அவருக்குப் பதிலாக தோமியர் கல்லூரி வீரர் தனுஜ விஜேரத்ன அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இந்நிலையில் வீரர்கள் தொடர்பில் அறிய thepapare.com சார்பாக குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்தபோது, வீரர்கள் அவரச சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமையை அறிய முடிந்தது.

இந்த சுற்றுத் தொடருக்கான வைத்தியர் அஸ்லின் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ”இந்த சுகயீனம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் நாம் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றோம். இது உணவு ஒவ்வாமையா அல்லது வேறு ஏதாவது தொற்றா என்பது தொடர்பில் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும் வீரர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது” என்றார். எனினும் ஆசிய ரக்பி, இது தொடர்பிலான ஒரு அறிக்கையை இன்று வெளியிடவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, இசிபதன கல்லூரி வீரர் கயான் விக்ரமரத்ன (புல் பெக் வீரர்), சயன்ஸ் கல்லூரி வீரர் ஜனித் லக்சர (ப்லேன்கர்) மற்றும் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் ஹென்ரி டெர்ரென்ஸ் ஆகியோரும் தற்பொழுது கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சில வீரர்களும் காய்ச்சல் தன்மையை உணருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது இடம்பெறும் குழு மட்டப் போட்டிகளில் இலங்கை கனிஷ்ட அணி, குழுவில் முன்னேற்றம் காண்பதற்கு நாளை (சனிக்கிழமை) சைனீஸ் தாய்ப்பே அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டி உள்ளது. இந்நிலையில் ஹொங்கொங் அணியுடனான போட்டியில் 5 நிமிடங்கள் மாத்திரம் விளையாடிய தனுஜ விஜேரத்னவும் நாளைய போட்டியில் பங்கு கொள்ள மாட்டார்.

இவ்வாறான ஒரு நிலையில், அணியின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இசிபதன கல்லூரியின் முன்கள வீரரான இசுரு உதயங்க நாட்டில் இருந்து மலேசியா பயணமாகுவார்.

குறித்த வீரர்கள் தொடர்பிலான மற்றும் பல விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் thepapare.com உடன் இணைந்திருங்கள்.