ஜப்பானையும் வீழ்த்திய இலங்கைக்கு 4ஆவது நேரடி வெற்றி

Asian Netball Championship 2024

75

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற 13ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் குழு A இல் இடம்பிடித்துள்ள நடப்புச் சம்பியனான இலங்கை அணி ஜப்பானுடன் நேற்று நடைபெற்ற போட்டியிலும் அபார வெற்றியீட்டி நான்காவது நேரடி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.  

இந்தியாவின் பெங்களூர் நகரில் உள்ள கோரமங்கலா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஜப்பான் அணி ஆரம்பம் முதலே பின்தங்கியிருந்ததுடன், முதல் காலிறுதியில் 17-6 புள்ளிகள் கணக்கிலும், இரண்டாவது காலிறுதியில் 39-11 என்ற புள்ளிகள் கணக்கிலும் இலங்கை அணி முன்னிலை பெற்றது 

இடைவேளைக்குப்  பின்னரும் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அடுத்த இரண்டு காலிறுதிகளையும் முறையே 23 – 1, 23 – 6 என தனதாக்கி ஒட்டுமொத்த நிலையில் 85 – 18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது. 

இலங்கை அணி சார்பில் துலங்கி வன்னித்திலக்க 38 முயற்சிகளில் 36 கோல்களையும் ஹசித்தா மெண்டிஸ் 30 முயற்சிகளில் 26 கோல்களையும் போட்டனர். 

ஏற்கனவே இலங்கை அணி தனது முதல் மூன்று போட்டிகளிலும் பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா மற்றும் இந்திய அணிகளை இலகுவாக வீழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி, தனது 5ஆவது லீக் போட்டியில் இன்று இரவு 7.00 மணிக்கு மலேசியாவை எதிர்கொள்கிறது. குறிப்பாக முன்னாள் சம்பியான மலேசியாவிடம் கடும் சவாலை இலங்கை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது. 

இதேவேளை, இலங்கை அணி முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் எதிர்வரும் 26ஆம் திகதி மாலைதீவுகள் அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்பலவிளையாட்டுசெய்திகளைபடிக்க<<