இலங்கையுடனான போட்டி மிகவும் கடினமாக இருக்கும்: கிமார் ரோச்

1056

இம்முறை உலகக் கிண்ணத்தில் இருந்து லீக் சுற்றுடன் வெளியேறினாலும், மேற்கிந்திய திவுகளுக்கு பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருப்பதாக அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் கிமார் ரோச் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் மேற்கிந்திய தீவுகள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் இந்திய…..

அத்துடன், இந்தியாவுடன் பெற்ற தோல்வியிலிருந்து தமது அணி நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்த அவர், அடுத்து விளையாடவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடனான லீக் ஆட்டம் மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்

12ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை அவுஸ்திரேலிய அணி மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.  

இந்த நிலையில், இதுவரை எந்தவொரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காத இந்திய அணி, மென்செஸ்டரில் நேற்று (27) நடைபெற்ற லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்தாடியது.  

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ஓட்டங்களைக் குவித்தது. வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை எடுத்து தோல்வியடைந்தது

இதன்மூலம், இம்முறை உலகக் கிண்ணத்திலிருந்து 3ஆவது அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நுவான் பிரதீப் ஆடுவதில் சந்தேகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் ……..

இந்த நிலையில், நேற்றைய போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேற்கிந்திய திவுகளின் வேகப் பந்துவீச்சாளர் கிமார் ரோச்,  

பாகிஸ்தானுடனான முதல் போட்டிக்குப் பிறகு எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என எமது வீரர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனாலும், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடைபெற்ற போட்டிகளில் மயிரிழையில் தோல்விகளை சந்திக்க நேரிட்டது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறதுஎன்றார்

தொடர் தோல்விகளை சந்திக்க நேரிட்டதில் இருந்து தாம் பெற்ற அனுபவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கு எம்மிடம் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால், அது எமக்கு சாதகமாக அமையவில்லை. எனவே, நாங்கள் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை எமது வீரர்கள் தமது தலையை சற்று உயர்த்திப் பார்த்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன். 

மேற்கிந்திய தீவுகள் அணி இந்த உலகக் கிண்ணத்தில் அரையிறுதி வாய்ப்பை இழந்தாலும், இளம் வீரர்கள் உட்பட பலர் தமது தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால், தான் நம்பிக்கை பெற்றுள்ளதாக கிமார் ரோச் குறிப்பிட்டார்

எங்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஷிம்ரன் ஹெட்மியர் மற்றும் ஷானே தோமஸ் ஆகிய இருவரும் இளம் வீரர்கள். அவர்கள் சில நல்ல வழிகாட்டுதல்களைப் பெற்றால் அவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு நல்லது செய்வார்கள்.

நான் எப்போதுமே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் ரசிகனாக இருப்பேன். இங்குள்ள ஒருசில வீரர்கள் நாட்டிற்கு திரும்பிச் சென்று சிறப்பாக செயல்படுவார்கள். எனவே, மேற்கிந்திய தீவுகள் அணியில் இவர்களுக்கான சிறந்த வழிகாட்டல்கள் கிடைக்கும் என நம்புகிறேன்என்றார்

இம்முறை உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை விளையாடிய 7 லீக் போட்டிகளில் ஹெட்மியர் மற்றும் ஷாய் ஹோப் ஆகிய இருவரும் 2 அரைச் சதங்களை குவித்திருந்ததுடன், ஷானே தோமஸ் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது

இதேநேரம், இந்தியாவின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு குறித்து கிமார் ரோச் குறிப்பிடுகையில், இந்தியா போன்ற ஒரு சிறந்த அணியுடன் விளையாடுவதிலிருந்து மட்டுமே ஏனைய அணிகள் கற்றுக்கொள்ளும். அவர்களுக்கு எதிராக விளையாடுவது கண்களைத் திறக்கும் போட்டி என்று உங்களுக்குத் தெரியும். எனவே, எம் போன்ற அணிகளுக்கு இது ஒரு நல்ல சோதனையாகும். அத்துடன், இந்த தொடரிலிருந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கு இது ஒரு நல்ல பாடமாகவும் இருக்கும்என்றார்

அத்துடன், விராத் கோஹ்லியின் துடுப்பாட்டம் பாராட்டத்தக்கது. அவர் ஒரு நட்சத்திர வீரர் என்பதை முழு கிரிக்கெட் உலகமும் நன்கு அறியும். எனவே, அவருக்கு எதிராக பந்துவீசுவது மிகவும் கடினமாகும். உண்மையில் அவர் ஒரு போராளி. இது சற்று மந்தமான ஆடுகளமாக இருந்தது. எனவே ஒரு பந்துவீச்சாளராக நேர்த்தியான முறையில் பந்துவீச்சுவது மிகவும் கடினமாகும்

ஆனாலும். நாங்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தோம். இதனால் இந்தியாவை 260 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தோம். எனவே எமது பந்து வீச்சாளர்கள் தமது பணியை சிறப்பாகச் செய்து கொடுத்தனர் என தெரிவித்தார்

ஐ.சி.சி இன் புதிய ஒருநாள் தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் ………

கடந்த 2009 ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்காக விளையாடி வரும் 30 வயதான கிமார் ரோச், இதுவரை 88 ஒருநாள் போட்டிகளில் 120 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன், நேற்று இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவர், 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்

மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்ததாக இலங்கையை எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில், தமது அடுத்த ஆட்டங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், ”மேற்கிந்திய தீவுகள் அணி தங்கள் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். இது உலகக் கிண்ணத் தொடர். உலகிலுள்ள தலைசிறந்த 10 அணிகள் இங்கே விளையாடி வருகின்றன

எனவே, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது மற்றை ஆட்டங்களைப் போலவே கடினமாக இருக்கும். அந்த 2 போட்டிகளிலும் நாங்கள் நேர்மறையாக இருந்து, எங்கள் திட்டங்களை செயல்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<