2022 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இருந்து மக்காவு அணியை நீக்கி இருக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் இலங்கையை அடுத்த சுற்றுக்கு தெரிவாக்கியுள்ளது.
இம்மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த உலகக் கிண்ண தகுதிகாண் பூர்வாங்க சுற்றின் இரண்டாம் கட்ட போட்டியில் விளையாடுவதற்கு மக்காவு கால்பந்து சம்மேளனம் அணியை அனுப்புவதற்கு மறுத்தது. கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாதுகாப்பை காரணமாகக் காட்டியே மக்காவு இந்த முடிவை எடுத்தது.
எனினும் மக்காவுவில் நடந்த முதல் கட்டப் போட்டியில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் அந்நாட்டு தேசிய அணி வீரர்களும் மக்காவு கால்பந்து சம்மேளத்தின் முடிவை எதிர்த்து போட்டிகளில் விளையாட மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு
இந்நிலையில் இந்த இரண்டாவது கட்டப் போட்டியில் மக்காவு அணி பின்வாங்கியதாகத் தீர்ப்பளித்திருக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுக்காற்றுக் குழு இலங்கைக்கு 3-0 என வெற்றியை அளித்துள்ளது. இதுதவிர, மக்காவு கால்பந்து சம்மேளனத்திற்கு பிஃபா 10,000 டொலர்கள் அபராதமும் விதித்துள்ளது.
இதன்போது போட்டியில் இருந்து வாபஸ் பெறல் மற்றும் விளையாடாமல் இருத்தல் மற்றும் கைவிடல் தொடர்பான 2022 பிஃபா உலகக் கிண்ண ஒழுங்கு விதியின் சரத்து 5 ஐ மீறியதாக பிஃபா ஒழுக்காற்றுக் குழு பரிசீலனை செய்துள்ளது.
அதேபோன்று பிஃபா ஒழுக்க விதியின் சரத்து 56 ஐ மீறியது குறித்தும் பரீசிலிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை அடுத்து இலங்கை கால்பந்து அணி பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் அடுத்த கட்டமாக 40 அணிகளுடன் இணைந்துள்ளது. இந்த சுற்றில் ஐந்து அணிகள் கொண்ட எட்டுக் குழுக்கள் மோதவுள்ளன. இதற்கான அணிகளை பிரிக்கும் குலுக்கள் முறை எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.
இதன் ஒவ்வொரு குழுவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் மற்றும் சிறந்த இரண்டாம் இடம் பிடிக்கும் நான்கு அணிகள் இறுதிக் கட்ட ஆசிய தகுதிகாண் சுற்றுக்கு முன்னேறும். இதில் நான்கு அணிகள் கட்டாரில் நடைபெறவிருக்கும் பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு ஆசிய மண்டலத்தில் இருந்து நேரடி தகுதி பெறும் என்பதோடு மற்றொரு அணி மண்டலங்களுக்கு இடையிலான பிளே ஓப் (play off) சுற்றில் விளையாடி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<