பிரான்ஸில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள மகளிர் கால்பந்து தொடருக்கான ஆசிய வலய தகுதிகாண் முதலாம் சுற்றில் இலங்கை அணி குழு D இல் இடம்பெற்றுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா மகளிர் கால்பந்து தகுதிகாண் சுற்றுக்கான ஆசிய வலயத்திற்குரிய குழுநிலைப்படுத்தல் கோலாலம்பூரில் உள்ள ஆசிய கால்பந்தாட்ட தலைமையகத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்றது.
இலங்கை உட்பட மொத்தமாக 26 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரானது 7 குழுக்களின் கீழ் நடைபெறவுள்ளது. அவற்றில் 5 குழுக்கள் நான்கு அணிகளைக் கொண்டதாகவும், ஏனைய 2 குழுக்கள் 3 அணிகளைக் கொண்டதாகவும் போட்டியிடவுள்ளன.
இந்த முதலாம் சுற்று தகுதிகாண் போட்டியில் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் நாடுகள் ஒன்றையொன்று எதிர்த்தாடும்.
- ThePapare சம்பியன் கிண்ணம் சென் ஜோசப் கல்லூரி வசம்
- கட்டாரும் 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ணத் தொடரும்
- ஆண்களின் உலகில் கால் பதித்த முதல் பெண் நடுவர்
இதில் இலங்கை அணியானது D குழுவில் இடம்பிடித்துள்ளதுடன், இந்த குழுவில் தாய்லாந்து, மொங்கோலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் தாய்லாந்தையும், இரண்டாவது போட்டியில் மொங்கோலியாவையும், கடைசிப் போட்டியில் சிங்கப்பூரையும் எதிர்த்தாடும்.
முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலாம் இடங்களைப் பெறும் 7 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும். ஆசிய மகளிர் கால்பந்து அணிகள் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் வட கொரியா, ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 4ஆவது இடத்தைப் பிடித்த அவுஸ்திரேலியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகியன 2ஆவது தகுதிகாண் சுற்றில் நேரடியாக பங்குபற்ற தகுதிபெறும்.
இந்த 12 அணிகளும் 2ஆவது தகுதிகாண் சுற்றுப் போட்டியில் தலா 4 அணிகள் வீதம் 3 குழுக்களின் கீழ் போட்டியிடும். 2ஆவது தகுதிகாண் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடங்களைப் பெறும் 3 அணிகளும் ஒட்டுமொத்த நிலையில் அதிசிறந்த 2ஆவது இடத்தைப் பெறும் அணியும் 3ஆவது தகுதிகாண் சுற்றில் விளையாட தகுதிபெறும்.
இந்த நான்கு அணிகளும் 2 ஜோடிகளாக சொந்த மண், அந்நிய மண் என்ற ரீதியில் ஒன்றையொன்று 2 தடவைகள் எதிர்த்தாடும். ஒட்டுமொத்த கோல்கள் நிலையில் வெற்றிபெறும் 2 ஆசிய மகளிர் கால்பந்து அணிகள் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான மகளிர் கால்பந்தாட்டத்தில் பங்குபற்ற தகுதிபெறும்.
இதனிடையே, பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா மகளிர் கால்பந்து ஆசிய வலய தகுதிகாண் முதலாவது சுற்றுத் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 9ஆம் திகதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு குழுவுக்குமான போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) அறிவித்துள்ளது.
முதலாவது தகுதிகாண் சுற்றில் பங்குபற்றும் அணிகள் விபரம்
A குழு: உஸ்பெகிஸ்தான், ஜோர்தான், திமோர்-லெஸ்டே, பூட்டான்.
B குழு: மியன்மார், ஈரான், பங்களாதேஷ், மாலைதீவுகள்.
C குழு: வியட்நாம், நேபாளம், பலஸ்தீனம், ஆப்கானிஸ்தான்.
D குழு: தாய்லாந்து, மொங்கோலியா, சிங்கப்பூர், இலங்கை.
E குழு: பிலிப்பைன்ஸ், ஹொங் கொங், தஜிகிஸ்தான், பாகிஸ்தான்.
F குழு: சைனீஸ் தாய்ப்பே, இந்தோனேசியா, லெபனான்.
G குழு: இந்தியா, கிர்கிஸ் குடியரசு, துர்க்மேனிஸ்தான்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<