இந்தோனேஷிய தலைநகரம் ஜகார்த்தாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஹொக்கி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.
ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள ஹொக்கி அணிகளைத் தெரிவு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது ஓமான் தலைநகரம் மஸ்கட்டில் நடைபெற்று வருகின்றன.
கண்டி ஹொக்கி சிக்ஸஸ் போட்டிகளில் விமானப்படை ஆதிக்கம்
தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் நடைபெற்ற…
பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, முதல் போட்டியில் கஸகஸ்தான் அணிக்கு எதிராக 6-0 என வெற்றியைப் பதிவு செய்தது. இதில் தம்மிக ரணசிங்க 2 கோல்களையும், ரஜித குலதுங்க, அநுருத்த சுரேஷ், தமித் பண்டார மற்றும் சந்தருவன் பிரியலங்க ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற சீன தாய்ப்பே அணிக்கெதிரான போட்டியில் 4–1 என வெற்றியைப் பதிவுசெய்த இலங்கை அணி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. குறித்த போட்டியில் இலங்கை அணிக்காக அநுருத்த சுரேஷ் 2 கோல்களையும், சந்தருவன் பிரியலங்க மற்றும் இசங்க ஜயசுந்தர ஆகியோர் தலா ஒரு கோலினையும் பெற்றுக்கொடுத்தனர்.
எனினும், போட்டிகளை நடாத்துகின்ற ஓமான் அணியுடனான லீக் போட்டியில் இலங்கை அணி, 5–1 என தோல்வியைத் தழுவி, குறித்த பிரிவில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று(15) நடைபெற்றதுடன், இதில் கடந்த வருடம் சம்பியனாக முடிசூடிய பங்களாதேஷ் அணியுடன் மோதிய இலங்கை ஆரம்பம் முதல் அபாரமாக விளையாடி 2 கோல்களைப் பெற்று முன்னிலை பெற்று வெற்றியின் விளிம்பையும் எட்டியிருந்தது.
எனினும், போட்டியின் கடைசி 11 நிமிடங்களில் தமது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி, 49, 52 மற்றும் 58ஆம் நிமிடங்களில் 3 கோல்களைப் பெற்று 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. இதில் இலங்கை அணிக்காக போட்டியின் 34ஆவது நிமிடத்தில் சுதுசிங்கவும், 52ஆவது நிமிடத்தில் ரணசிங்கவும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நாளை(17) நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி, தாய்லாந்து அணியை எதிர்த்து போட்டியிடவுள்ளது.
இதன்படி, இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை 32 நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்கள் ஹொக்கி போட்டிக்காக இலங்கை, ஓமான், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் தகுதியினைப் பெற்றுக்கொண்டன.