தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்கு இரண்டாவது இடம்

348

மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா ஒட்டுமொத்த சம்பியனான தெரிவாகியதுடன், போட்டிகளை நடாத்திய இலங்கை 12 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

நவீனமயப்படுத்தப்பட்ட சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (06) நிறைவடைந்தது.

போட்டிகளின் 2ஆவது நாளில் முதலாவது தங்கப் பதக்கத்தை பெண்களுக்கான 800 மீற்றரில் கலந்துகொண்ட இலங்கையின் டில்ஷி குமாரசிங்க பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியை 2 நிமிடங்களும் 07.73 செக்கன்களில் நிறைவு செய்த அவர், புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையும் படைத்தார்.

முன்னதாக 2013ஆம் ஆண்டு ரஞ்சியில் நடைபெற்ற 2ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஜெஸ்ஸி ஜோசப்பினால் (2.08.38 செக்) நிலைநாட்டப்பட்ட சாதனையை டில்ஷி குமாரசிங்க முறியடித்தார்.

டில்ஷி குமாரசிங்க

இதேநேரம், எதிர்வரும் ஜுலை மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கும் அவர் தகுதி பெற்றார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஒட்டப் போட்டியிலும் பங்குபற்றியிருந்த டில்ஷி குமாரசிங்க (54.47 செக்.) புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரின் முதல் நாளில் இலங்கை 5 தங்கப் பதக்கங்கள்

டில்ஷியுடன் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த இந்திய வீராங்கனைகளான துர்கா பிரமோத் (2.09.27 செக்.), அன்கித் சஹால் (2.11.79 செக்.) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இதேவேளை, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் ஹர்ஷ கருணாரத்ன (ஒரு நிமிடம் 53.35 செக்.) தங்கப் பதக்கம் வென்றதுடன், சக வீரரான இசுரு லக்‌ஷான் (ஒரு நிமிடம் 53.95 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

எனினும், குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்த பதுளை மெய்வல்லுனர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சந்திரகுமார் அரவிந்தனுக்கு (ஒரு நிமிடம் 55.26 செக்.) 4ஆவது இடத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

தடைதாண்டலில் இரட்டை சாதனைகள்

பசிந்து கொடிகார

ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய வீரர்கள் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை வீரர் பசிந்து கொடிகார ஆரம்பம் முதல் முன்னிலை பெற்றிருந்தார். எனினும், பசிந்துவுக்கு பலத்த போட்டியை இந்திய வீரர் அமான் கொடுத்திருந்ததை காணமுடிந்தது. இந்நிலையில், போட்டியின் இறுதி சட்டவேலியை தாண்டுவதில் பின்னடைவை சந்தித்த பசிந்து, அமானுடனான இடைவெளியை இறுதி ஒரு சில செக்கன்களில் தவறவிட்டார். இதன்படி, குறித்த இரண்டு வீரர்களும் எல்லைக் கோட்டை ஒரே நேரத்தில் கடந்திருந்ததை சலனப் படங்கள் மூலம் தெரியவந்தது.

இறுதியில் நடுவர்களின் ஏகோபித்த முடிவின்படி, 52.56 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த இலங்கையின் பசிந்து கொடிகாரவுக்கு தங்கப் பதக்கமும், அதே காலத்தைப் பதிவு செய்த இந்திய வீரர் அமானுக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.

இதேநேரம், குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்த இந்தியாவின் மற்றுமொரு வீரரான மகேஷ் உதேகர் (53.35 செக்.) வெண்கலப் பதக்கம் வென்றார்.

200 மீற்றரில் இலங்கைக்கு ஹெட்ரிக் பதக்கம்

200 மீற்றரில் பதக்கங்கள் வென்ற ஷர்மிலா, அமாஷா, ஷெலிண்டா

தெற்காசியாவின் அதிவேக கனிஷ்ட வீராங்கனையாக புதிய போட்டி சாதனையுடன் மகுடம் சூடிய இலங்கை பெண்கள் அணியின் தலைவி அமாஷா டி சில்வா, இன்று (06) நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் (24.70 செக்.) தங்கப் பதக்கம் வென்றார்.

எனினும், அவருடன் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்த சக வீராங்கனைகளான ஷெர்மிலா ஜேன் (24.80 செக்.), ஷெலிண்டா ஜென்சன் (12.28 செக்.) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

முன்னதாக போட்டிகளின் முதல் நாளில் நடைபெற்ற பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பங்குபற்றியிருந்த இந்த மூன்று வீராங்கனைகளும் புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அருணவுக்கு இரண்டாவது தங்கம்

அருண தர்ஷன

இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் அணியின் தலைவராக செயற்பட்ட அருண தர்ஷன ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அதற்காக அவர் 21.50 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

இதன்படி, இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரில் தனிநபர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரராகவும் இடம்பிடித்தார்.

முன்னதாக ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் (46.55 செக்), புதிய போட்டி சாதனையுடன் அருண தர்ஷன தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் பங்குபற்றிய இந்திய வீரர்களான நிதின் எஸ். பாலகுமார் (21.63 செக்.), ஆகாஷ் குமார் (21.86 செக்.) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

4 x 400 போட்டியில் இலங்கைக்கு கௌரவம்

பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்ட இலங்கை அணி

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதி போட்டி நிகழ்ச்சியாக நடைபெற்ற 4 x 400 அஞ்சலோட்டப் போட்டிகள் முக்கிய இடத்தை வகித்ததுடன், இதில் இலங்கை அஞ்சலோட்ட குழாம் புதிய தெற்காசிய கனிஷ்ட போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றிக் கொண்டது.

ஆரம்பத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டத்தில் ஏற்கனவே 100 மற்றும் 200 மீற்றரில் தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை அணியின் தலைவி அமாஷா டி சில்வா, 400 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற டில்ஷி குமாரசிங்க, ரொமேஷி அத்திடிய, சச்சினி திவ்யாஞ்சலி உள்ளிட்ட இலங்கை அணியினர் (3 நிமிடங்கள் 43.31 செக்.) புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

முன்னதாக 2007ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட அணியினால் (3 நிமிடங்கள் 43.31 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை மீண்டும் இலங்கை அணி வீராங்கனைகள் முறியடித்தனர்.

இப்போட்டியில் இந்திய அணி (3 நிமிடங்கள் 46.08 செக்.) முந்தைய சாதனையை விட சிறப்பாக ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும், பங்களாதேஷ் அணி (3 நிமிடங்கள் 46.08 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

இதேவேளை, அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்ட இறுதி போட்டி நிகழ்ச்சியான ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கை வீரர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.

ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்ட இலங்கை அணி

எனினும், இப்போட்டியில் 2ஆவது மற்றும் 3ஆவது கோல் பரிமாற்றங்களில் இந்திய வீரர்கள் இலங்கைக்கு சவால் கொடுத்திருந்தனர். ஆனால் அந்த சவாலை இறுதி வீரராக ஓடி லாவகமாக முறியடித்த அருண தர்ஷன உள்ளிட்ட இலங்கை குழாம் போட்டியை 03 நிமிடங்கள் 08.21 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

முன்னதாக 2007ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இந்திய 4 x 400 அஞ்சலோட்ட அணியினால் (3 நிமிடங்கள் 14.56 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை மீண்டும் இலங்கை அணி 11 வருடங்களுக்குப் பிறகு முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இப்போட்டியில் இந்திய அணி (3 நிமிடங்கள் 09.33 செக்.) முந்தைய சாதனையை விட சிறப்பாக ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும், பாகிஸ்தான் அணி (3 நிமிடங்கள் 22.98 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

மைதான நிகழ்ச்சிகளில் இந்தியா சாதனை

3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் 2ஆவது நாளிலும் நடைபெற்ற பெரும்பாலான மைதான நிகழ்ச்சிகளில் இந்திய வீரர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்தி 7 புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர்.

இதில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் ஆஷிஸ் பலோதியா (18.53 மீற்றர்) புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், சாஹிப் சிங் (17.75 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். எனினும், இலங்கையின் மனேஷ் மலிந்த (11.51 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டிகளில் பங்குபபற்றிய தமிழ் நாட்டைச் சேர்ந்த கமல்ராஜ் கனகராஜ் (16.05 மீற்றர்) புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அதேநேரம் பெண்கள் பிரிவில் பிரியதர்ஷனி சுரேஷ் (12.90 மீற்றர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

அத்துடன், பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் இந்தியாவின் அர்பந்தீப் பஜ்வா (48.60 மீற்றர்), புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இதேவேளை, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சஞ்சனா செவுத்ரி (48.08 மீற்றர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

எனினும், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை முறையே இலங்கையின் ஐ. ஹசந்தி (40.80 மீற்றர்), மற்றும் என். உதயவானி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் இந்தியா மற்றுமொரு புதிய சாதனையை நிலைநாட்டியது. குறித்த போட்டியை 9 நிமிடங்கள் 50.21 செக்கன்களில் நிறைவு செய்த பூனம் டின்கர் சோனு தங்கப் பதக்கத்தை வென்றார். எனினும், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை முறையே இந்தியாவின் சவிதா பால் (10 நிமிடங்கள் 04.21 செக்.), மற்றும் இலங்கையின் எஸ். ஹேரத் (10 நிமிடங்கள் 06.12 செக்.) பெற்றுக்கொண்டனர்.

பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்

இரண்டாவது தடவையாகவும் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், இம்முறை போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 84 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், இந்தியாவிலிருந்து 59 வீர, வீராங்கனைகளும் கலந்துகொண்டிருந்தனர். எனவே இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான போட்டியாகவே தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமைந்திருந்தது.

இதன்படி, இம்முறை மைதான நிகழ்ச்சிகளில் இந்தியாவும், சுவட்டு நிகழ்ச்சிகளில் இலங்கையும் முன்னிலை பெற்றிருந்ததுடன், இந்தியா 13 போட்டி சாதனைகளையும், இலங்கை 9 போட்டி சாதனைகளையும் பதிவுசெய்தது.

இதேவேளை, 20 தங்கம் 22 வெள்ளி 8 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தமாக 50 பதக்கங்களைப் பெற்ற இந்தியா தொடரில் ஒட்டுமொத்த சம்பியனானது.

அத்துடன், 12 தங்கம் 10 வெள்ளி 19 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்தமாக 41 பதக்கங்களை வென்ற இலங்கை பதக்கப்பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்தது. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்ளை வென்ற பாகிஸ்தான் பதக்கப்பட்டியலில் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.