ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட சர்வதேச வலைப்பந்தாட்ட தர வரிசைப்பட்டியலில், இலங்கை அணியானது 27ஆவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்,மலேசியா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளும் இலங்கை அணியை விட தர வரிசையில் முன்னிலையில் காணப்படுகின்றன. சிங்கப்பூர் 19ஆவது இடத்தில் காணப்படுவதோடு, 2016ஆம் ஆண்டு ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற மலேசிய அணி 21ஆம் இடத்திலும் உள்ளது. ஹொங்கொங் அணியானது இலங்கை அணியை விட இரண்டு நிலைகள் முன்னிலையில், 25ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், சிங்கப்பூர் அணியானது மொத்தமாக 50 போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, இலங்கை அணி 23 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. மேலும் சிங்கப்பூர் அணியானது கடந்த இரண்டு வருடங்களில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள அதேவேளை இலங்கை அணியானது 6 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளது.

2009ஆம் ஆண்டு இலங்கை அணி ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை சுவீகரித்தபோது, இலங்கை அணி தர வரிசையில் வரலாற்றில் உச்சக் கட்டமாக 14ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. எனினும் அதன் பின்னர் இலங்கை அணி தர வரிசையில் பின் நோக்கி செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

NR1NR2

தரவரிசையைத் தீர்மானித்தல்

தரவரிசையானது, ஒரு அணியின் சராசரி செயற்திறனை வைத்தே முடிவு செய்யப்படுகின்றது. ஒவ்வொரு அணியும், தாம் விளையாடும் ஒவ்வொரு சர்வதேச போட்டிகளுக்கும் குறிப்பிட்ட அளவு புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும். அதன்படி அவர்கள் பெற்ற மொத்தப் புள்ளிகளை, அவர்கள் விளையாடிய மொத்தப் போட்டிகளால் வகுத்து, சராசரிப் புள்ளி பெறப்படும். இதன்படியே தரவரிசையில் ஒவ்வொரு அணியின் நிலையும் தீர்மானிக்கப்படுகின்றது.

நீண்ட காலங்களுக்கு முன்னர் விளையாடப்பட்ட போட்டிகள் ஒரு அணியின் தற்போதைய செயற்திறனை பிரதிபலிக்காது. எனவே நடைபெற்று முடிந்த ஒவ்வொரு போட்டியின் முடிவுக்கும் வெவ்வேறு விதமாக முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் நீண்ட காலங்களுக்கு முன்னர் விளையாடப்பட்ட போட்டிகளுக்கு குறைவான முன்னுரிமையே புள்ளிக் கணிப்பீட்டின் மூலம் கொடுக்கப்படுகின்றது. தற்போது, 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் விளையாடப்பட்ட போட்டிகளின் முடிவுகளுக்கு 100% முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு, அதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளுக்கு (2013 ஜூலை – 2015 ஜூன்) 50% முன்னுரிமையே வழங்கப்படுகின்றது. 2013ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் தரவரிசையில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தாது.

புள்ளிகள்

ஒரு அணி பெற்றுக்கொள்ளும் புள்ளிகளானது இரண்டு காரணிகளில் தங்கியுள்ளது. முதலாவது, போட்டியின் முடிவு (வெற்றி, தோல்வி அல்லது சமநிலையில் முடிந்தததா என்பது). இரண்டாவது, எதிரணியின் தரவரிசை நிலை. எதிரணியின் தரவரிசை நிலையானது தமது அணியின் தரவரிசை நிலையைவிட உயர்ந்ததாகக் காணப்படின், எதிரணியை வென்றால் கிடைக்கப்பெறும் புள்ளிகள் அதிகமாகும்.

ஒரு அணி வெற்றிபெற்றால், அவ்வணி தமது எதிரணியின் மதிப்பீட்டைவிட 50 புள்ளிகள் அதிகமாக பெறும். அதேவேளை தோல்வியுற்றால் எதிரணியின் மதிப்பீட்டைவிட 50 புள்ளிகள் குறைவாகப் பெறும்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் சரிவுக்கு காரணம் யாது? இதனை எவ்வாறு சீராக்கலாம்? உங்களுடைய கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.