வேல்ஸ் அணியிடம் போராடி வீழ்ந்த இலங்கை!

Netball World Cup 2023

283
Sri Lanka go down fighting against Wales
(Photo by Shaun Roy/Gallo Images/Netball World Cup 2023)

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிராக போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 68-56 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.  

ஆட்டத்தின் முதல் காற்பகுதியில் வேல்ஸ் அணி 3-1 என்ற ஆரம்பத்தை பெற்றாலும் 6-6 என இலங்கை அணி ஆட்டத்தை சமப்படுத்தியது. ஒரு கட்டத்தில் 10-9 என முதற்காற்பகுதி விறுவிறுப்பாக இருந்தபோதும், இறுதியில் வேல்ஸ் அணி 17-11 என முன்னிலையைப் பெற்றது. 

>> ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மூன்றாவது இடம்

இரண்டாவது கால் பகுதியில் இலங்கை அணி மீண்டும் கடுமையான போட்டியை கொடுத்து 11 புள்ளிகளை பெற்றபோதும், 13 புள்ளிகளை பெற்ற வேல்ஸ் அணி முதற்பாதியில் 30-22 என முன்னிலையை பெற்றுக்கொண்டது. 

தொடர்ந்து ஆரம்பமான மூன்றாவது கால் பகுதியில் இலங்கை அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்று, இடைவெளியை 41-36 என குறைத்த போதும், கடைசி 5 நிமிடத்தில் 9 புள்ளிகளை பெற்ற வேல்ஸ் அணி 10 புள்ளிகள் இடைவெளியை அதிகரித்து 50-40 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப்பெற்றது. 

தொடர்ந்து ஆரம்பமான இறுதி கால் பகுதியில் இரண்டு அணிகளும் சம பலமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் மீண்டும் 18-16 என்ற முன்னிலையை பெற்ற வேல்ஸ் அணி 68-56 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. 

இலங்கை அணி சார்பாக தர்ஜினி சிவலிங்கம் 35 முயற்சிகளில் 33 புள்ளிகளை பெற்றுக்கொடுத்ததுடன், திசாலா அலகம 21 முயற்சிகளில் 16 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். 

இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் முதல் போட்டியில் ஜமைக்கா அணியிடம் 105-25 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்திருந்ததுடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 87-32 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<